ETV Bharat / state

"நீட் மசோதாவில் தாமதம் வேண்டாம்" - குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்

author img

By

Published : Aug 14, 2023, 7:00 PM IST

Tamilnadu Neet Exam Issue: நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுதலைவருக்கும் முதல்வர் கடிதம்
குடியரசுதலைவருக்கும் முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ளகடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது என்றும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது .நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததாகவும், இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில்,

தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, 18ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பிவிட்டதால்,மீண்டும் கடந்தாண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால்,இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு என்றும், அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்ல, சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.