ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம்

author img

By

Published : Apr 4, 2023, 6:30 PM IST

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது. அவர்கள் தங்களின் செல்போன்களை ஆப் செய்து , தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும்.

அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்யவும் கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் தொடக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடிவடைகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 3,976 மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் எழுதுகின்றனர்.

இவர்களுக்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்களும், 14 ஆயிரத்து 441 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என 37 ஆயிரத்து 798 பேர் 182 மையங்களில் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 7,751 மாணவர்களும், 5,400 மாணவிகளும் என 13,151 பேர் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 264 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் 9 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை:

  • ஏப்ரல் 6ஆம் தேதி மொழித்தாள்
  • ஏப்ரல் 10 ஆம் தேதி ஆங்கிலம்
  • ஏப்ரல் 13 ஆம் தேதி கணக்கு
  • ஏப்ரல் 15 ஆம் தேதி விருப்பப்பாடம்
  • ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவியல்
  • ஏப்ரல் 20 ஆம் தேதி சமூக அறிவியல்

இந்த தேர்வினை எந்தவித புகாரும் இல்லாமல் நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மாவட்டங்களுக்கு மேற்பார்வை பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாற்றுதிறனாளிகள் 13,151 பேருக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசின் உத்தரவின் படி அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களுக்கான தேர்வினை எழுதுவதற்கான விதிமுறைகளையும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள் மற்றும் முகப்புத் தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது விடைத்தாளில் தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து கையொழுத்திட்டால் மட்டும் போதுமானது. கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் உள்ளார்.

மேலும் சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கட்டுபாட்டு அறை 10 ம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள்மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில்முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில்ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டுஅறையினை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுப்பட்டால் வழங்கப்படகூடிய தண்டனை விபரங்கள் அச்சிடப்பட்டு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

தேர்வு மையமாக செயல்படகூடிய பள்ளிகளில் காலையில் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வினை கண்காணிக்கும் பணியில் நியமிக்க கூடாது எனவும், தேர்வுத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.