ETV Bharat / state

Dmk Files: திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு சொத்து?

author img

By

Published : Apr 14, 2023, 2:21 PM IST

திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதன்படி, திமுகவின் சொத்து மதிப்பு 1.31 லட்சம் கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியின் ஊழல் விபரங்களையும் வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Chief
அண்ணாமலை

சென்னை: பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று(ஏப்.14) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், "நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு 50,219 கோடி ரூபாய், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு சொத்து மதிப்பு 5,442 கோடி ரூபாய், நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொத்து மதிப்பு 2,495 கோடி ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் சொத்து மதிப்பு 830 கோடி ரூபாய், கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 12,450 கோடி ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு 10,841 கோடி ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு 579 கோடி, சட்டமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமியின் சொத்து மதிப்பு 2,923 கோடி ரூபாய், அமைச்சர் பொன்முடியின் சொத்து மதிப்பு 581 கோடி ரூபாய், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொத்து மதிப்பு 1,023 கோடி ரூபாய், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2,039 கோடி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "சாமானிய மனிதன் அரசியலுக்கு வந்தால் இருக்கக் கூடிய பிரச்சனை எனக்கும் இருக்கிறது. நாங்கள் நடத்துவது ஜனநாயகத்திற்கான போராட்டம். 1974 ஜெயகாந்தன் திமுக குறித்து எழுதியதில், 'மனித மரியாதைக்கும், நமது கலாச்சாரத்திற்கும் ஏற்பட்ட பேரழிவு திமுக- சமூகத்தில் நிலவிய ஊழல்களின் மொத்த விளைவு திமுக- தனி மனித அழுக்குகளின் மொத்த வடிகால் திமுக' என கூறியுள்ளார். பல தொழிலதிபர்களின் எதிர்ப்பை இன்று சம்பாதித்துள்ளேன்.

எதிர்கட்சிகள் கடைசி ஆண்டில் சில அறிக்கைகளை கொடுத்துவிட்டு 4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வருவது தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாஜக அப்படியல்ல. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதன் ரவிச்சந்திரன் எனும் பையனை ஸ்டிங் ஆபரேஷன் செய்ய உடுப்பிக்கு அனுப்பியுள்ளனர். திமுகவினர் ஆரூத்ராவால் பாதிக்கப்பட்டோர் என சிலரை ஆட்டோவில் ஏற்றி வந்து கமலாலயம் முன்பு போராட்டம் நடத்த வைக்கின்றனர். ஆரூத்ரா வழக்கை திமுகவிற்கு துணிச்சல் இருந்தால் சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

பிரதமர் சென்னை வந்தபோது, என்னை சென்னைக்கு வரவேண்டாம் என பிரதமர் கூறினார். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கர்நாடக தேர்தல் பணியில் ஈடுபடுமாறு கூறினார். தினந்தோறும் மோடியை பார்க்கிறேன். மோடியை தமிழ்நாட்டில் வைத்து பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தொண்டர்கள் பார்க்கட்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியின் ஊழலையும் வெளியிடுவேன்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நான் தலைவராக இருக்கும்வரை இப்படித்தான் செயல்படுவேன். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் மொத்தமாக எதிர்த்துத்தான் ஆக வேண்டும். ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. இதை மாற்ற என்று நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். யார் தயவிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் 10 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன். என் மண், என் மக்கள் என ஊழலை எதிர்த்து பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஊழலுக்கு எதிரான எனது நடைபயணம் தொடங்கும்.

ஊழலை மொத்தமாக வேரறுப்போம். தமிழகத்தின் வருவாய் மதிப்பு இந்த ஆண்டு 2.30 லட்சம் கோடி ரூபாய். ஆனால், திமுகவின் பினாமி சொத்தே இதைக் காட்டிலும் அதிகம். சென்னை கோவை இரண்டுமே ஆங்கிலேயர் வசதிக்காக வடிவமைக்கப்பட்ட நகரங்கள். தமிழகத்தின் 65 சதவீத பொருளாதாரம் இந்த இரு நகரம் மூலமே கிடைக்கிறது. திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆட்சி செய்து வேறு எந்த பகுதியும் வளரவில்லை. அப்புறம் என்ன திராவிட மாடல்? - 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்க நான் தயார். மண், தண்ணீர் லாரி பயத்தை எல்லாம் என்னிடம் காட்ட முடியாது. அதனால்தான் கூடுதல் பாதுகாப்பு வாங்கி வைத்துள்ளேன்.

அதிகபட்சம் புழல் சிறையில் சில நாட்கள் என்னை அடைக்க முடியும். ஊழல் பட்டியலை 4 பகுதி வரை வெளியிடுவேன். வேறு வேறு கட்சிகளும் அதில் இடம்பெறும். நேரடியாக ஊழல் புகாரை முதலமைச்சர் மீது சுமத்துகிறேன். சென்னை மெட்ரோ முதல் கட்டப் பணிக்கு 2011-ல் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒப்பந்தம் கொடுத்தனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின்தான் முதல் குற்றவாளி. ஒப்பந்த மதிப்பு 14,600 கோடி ரூபாய். விதிமீறிய ஒப்பந்தம் மூலம் 200 கோடி ரூபாய் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் மூலம் 2011 தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை கோர உள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "இது தாங்க ரஃபேல் வாட்ச் பில்; ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன்" ஆதாரம் காட்டிய அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.