ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

author img

By

Published : Nov 15, 2021, 6:33 PM IST

Updated : Nov 17, 2021, 6:45 AM IST

சென்னையில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவிகள் பள்ளிகளில் முன்கூட்டியே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை: கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லை (sexual harassment) காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணமான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் (POCSO ACT - Protection of Children from Sexual Offences) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்தும், பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தன் என்பவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

ஆசிரியர்கள் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த இரண்டு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு விசாரணையின்போது முன்வைக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களிடம் விசாரணை நடைபெற்றது. ஆனால் சென்னை காவல்துறை பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் மீது மட்டும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கோவை பள்ளி மாணவி விவகாரத்தில், பள்ளி முதல்வர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை, சென்னையிலும் மாணவிகள் முன்கூட்டியே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை காவல்துறை விளக்கம்

இது குறித்து சென்னை காவல்துறை தெரிவித்த போது, "இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.

இதன் காரணமாகவே தனியார் பள்ளிகள் நிர்வாகத்தின் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை" என விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காயல்பட்டினம் வார்டு எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிய வழக்கு: ஆட்சியர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு

Last Updated : Nov 17, 2021, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.