'ஆக. 14இல் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்'

author img

By

Published : Aug 6, 2021, 1:41 PM IST

வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை
வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை ()

வரும் 14ஆம் தேதி வேளாண் துறைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி கோவிட்-19 காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தல் குறித்த கருத்தரங்கு இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி நான்கு நாள்கள் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.

மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கடந்த 32 ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக அளவில் சிறந்த பெயர் பெற்று விளங்குகிறது. அந்த நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

நிதிநிலை அறிக்கையில் உழவர்களின் வருவாயை உயர்த்தும் அம்சம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில்கொண்டு வருகிற 13ஆம் தேதி காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட இருக்கிறது. மேலும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உழவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் வருகிற 14ஆம் தேதி வேளாண் துறைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படுகிறது.

வேளாண்மைக்குத் தனியாக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை, உழவர் சந்தை, கிராம சந்தை, என உழவர்களின் வருவாயை உயர்த்தக்கூடிய வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது.

அதுமட்டுமின்றி நீர்ப்பாசனத்திற்குத் தனியாக ஒரு அமைச்சர் நியமனம்செய்யப்பட்டதன் மூலம் நிலத்தடி நீர் உயர்வு, சென்னையில் வெள்ளநீர் தேக்கம் பிரச்சினைக்குத் தீர்வு எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன.

உழவர்களின் லாபத்தைப் பெருக்குவதுதான் குறிக்கோள்

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும்
வேளாண்மையைப் பாதுகாக்கக்கூடிய வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சுற்றுச்சூழலுக்குத் தனியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பருவநிலை மாறுபாடு மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது உருவாகியிருக்கிறது. இதனை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்குத் தங்களது அறிவுரைகள், கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.

அவர்களின் கருத்துகளைப் பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அறிவியல் பூர்வமான வேளாண் உற்பத்தி, இயற்கை வேளாண்மை, அயோடின் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து உழவர்களின் லாபத்தைப் பெருக்குவது அரசின் குறிக்கோள்" எனத் தெரிவித்தார்.

பங்கேற்றோர்

இவ்விழாவில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிறுவனர் சுவாமிநாதன், சௌமியா சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பத்திரிகையாளர் இந்து ராம் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஆக. 15 பிறக்கும் நள்ளிரவில் பேரவையில் சிறப்பு விழா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.