ETV Bharat / state

மும்முரமாக நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகைக்கான பணிகள்.. 2ம் கட்ட விண்ணப்பதிவு இன்று முதல் தொடக்கம்..

author img

By

Published : Aug 5, 2023, 2:26 PM IST

சென்னை மாநகராட்சி பகுதியில் 102 வார்டுகளில் உள்ள 724 நியாயவிலைக் கடைகளில் மகளிர் உரிமைத் தொகை திட்ட 2ம் கட்ட விண்ணப்பப் பதிவு பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பம் விநியோகம் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் முதல் கட்டமாக கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முதலில் தருமபுரியில் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, ஜூலை 27ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

ஆகஸ்ட் 04 நிலவரப்படி 79.66 லட்சம் பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 05) தொடங்கியது. இந்த இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் செய்யும் பணி ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதல்கட்டமாக 704 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த ஜூலை 24ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த பணி வெள்ளிக் கிழமையுடன் முடிவடைந்தது. மீதமுள்ள 724 ரேஷன் கடைகளுக்கும் இன்று (ஆகஸ்ட் 05 ) முதல் 16ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “சென்னையில் முதல் கட்டமாக நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பதிவு பணி முகாமில் 4,70,301 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தந்த வார்டுகளில் நடைபெற்று வரும் பதிவு செய்யும் பணிகளை கவுன்சிலர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். சென்னையில் முதல் கட்டமாக 98 வார்டுகளில் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 102 வார்டுகளில் உள்ள 724 நியாயவிலைக் கடையில் சிறப்பான முறையின் விண்ணப்ப பதிவு பணி நடைபெற்று வருகிறது.

அதில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1751 முகாம்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர், நியாய விலைக்கடைகளுக்கு முகாம் அலுவர்கள் என்று நியமித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இதில் அனைத்து அதிகாரிகளும் முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த இரண்டு முகாமில் விடுபட்டவர்களுக்கு ஆக.17 முதல் 28ம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும். இந்த முகாம் குறித்த சந்தேங்களுக்கு 15 மண்டலங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் 044-25619208 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வில், அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன், மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: வீழ்ச்சியை காணும் தக்காளி விலை.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.