ETV Bharat / state

சென்னையில் பால் வியாபாரி கொலை வழக்கு: ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

author img

By

Published : Feb 28, 2023, 2:57 PM IST

சென்னை வளசரவாக்கத்தில் முன் விரோதம் காரணமாக, பால் வியாபாரியை கொலை செய்த வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர், தட்சிணாமூர்த்தி(35). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் வளசரவாக்கம், பெத்தானியா நகரை சேர்ந்த கோபி(எ)கர்ணா(48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8.3.2003 அன்று கோபி வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வைத்து தட்சிணாமூர்த்தியை ஓடஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார், கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கோபி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கோபி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு திருவண்ணாமலை பகுதியில் வைத்து வளசரவாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. நேற்று (பிப்.27) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தியின் மகன் ராமநாதன் பக்ரைனில் இருந்ததால் நீதிமன்றத்தில் சாட்சியத்திற்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி போலீசாரால் அழைத்து வரப்பட்டு சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார்.

இதையும் படிங்க: மதுரையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.