ETV Bharat / state

'குயின்' தொடருக்கு தடை கோரிய வழக்கு: தீபா கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

author img

By

Published : Sep 12, 2020, 5:08 PM IST

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள 'குயின்' தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

சென்னை
சென்னை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் ஹைதரபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த 'குயின்' என்ற இணையதள தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வெளியான 'குயின்' இணையதள தொடர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரினார்.

அதற்கு கௌதம் மேனன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 'குயின்' தொடர் வேறு மொழிகளில் வெளியாகி விட்டதாகவும், அதன் தமிழ் வடிவம் தான் தற்போது ஒளிபரப்பாக உள்ளதாகவும் வாதிட்டார். இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் 'குயின்' தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.