ETV Bharat / state

ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

author img

By

Published : Dec 2, 2022, 2:17 PM IST

ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பதிவுத்துறையை சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) தொடங்கி வைத்தார். அதோடு, இந்த நிதியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுள், ஏழு ஆவண எழுத்தர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை (Membership Cards) வழங்கினார்.

2021-2022 ஆம் நிதியாண்டிற்கான பதிவுத்துறை மானியக் கோரிக்கையில், பதிவுத்துறையை சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக, ஆவண எழுத்தர்களின் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆவண எழுத்தர்களின் நல நிதியம் குறித்து 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வகையில் நலத்திட்டங்களுக்கான உதவி தொகை தற்போதைய பண மதிப்பீட்டின் அடிப்படையில் மிகக் குறைவாக உள்ளதாக கருதப்பட்டது.

இதனால், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு நலத் திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் நடைமுறைப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியச் சட்டம், 2022 இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி, 30.06.2021 அன்று உள்ளவாறு ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5,188 நபர்களிடம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர்களாக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1000 வசூலிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10 வீதம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும்.

இவ்வாறு ஒருமுறை செலுத்தப்படும் சந்தா தொகை மற்றும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் நல நிதிய பங்களிப்பு ஆகியவை நிதியமாக நிர்வகிக்கப்பட்டு, அதிலிருந்து நல நிதிய நலத் திட்டங்களுக்கான செலவுகள் ஈடு செய்யப்படும்.

ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறுதி சடங்கு நிதி, மூக்குக்கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

இதற்கு பதிவுத்துறை தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலர்களையும், ஆவண எழுத்தர் சங்கத்திலிருந்து நியமனம் செய்யப்படும் 4 நபர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு இந்த நல நிதியத்தை நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.