ETV Bharat / state

பேருந்து சேதம் தொடர்பான வழக்கு - ஜிகே மணி மேல்முறையீடு

author img

By

Published : Feb 18, 2022, 1:22 PM IST

மரக்காணம் கலவரத்தின்போது பேருந்து சேதபடுததப்பட்டது தொடர்பான இழப்பை வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து சேதத்திற்கு இழப்பீடு வழங்க மறுத்த ஜி கே மணி - உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..
பேருந்து சேதத்திற்கு இழப்பீடு வழங்க மறுத்த ஜி கே மணி - உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..

சென்னை:கடந்த 2013ம் ஆண்டு வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரைத் திருவிழாவின்போது ஏற்பட்ட மரக்காணம் கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேதத்தின் இழப்பை வசூலிப்பது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014இல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கலவரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

58 பேருந்துகள் சேதம்

அந்தக் கலவரத்தின் போது 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொதுச் சொத்துக்களைச் சேதம் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

மேல்முறையீடு

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி. கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.