ETV Bharat / state

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான திமுக அரசின் தொடர் ரெய்டு அஸ்திரங்கள்!

author img

By

Published : Dec 15, 2021, 4:51 PM IST

தங்கமணியோடு சேர்த்து இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ரெய்டு
ரெய்டு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

குறிப்பாக 2021 ஜூலை 27 அன்று போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் 25 லட்சம் ரூபாய் பணம், காப்பீட்டு நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. அதில் 13 லட்சம் ரூபாய், இரண்டு கோடி ரூபாய் வைப்புத்தொகை, மாநகராட்சி டெண்டர், பத்திரப்பதிவு ஆவணங்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி பத்திரப்பதிவுத் துறை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதில் 34 லட்சம் ரூபாய், அந்நியச் செலாவணி டாலர் ஒரு லட்சம், ஒன்பது சொகுசு கார்கள், 624 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள், 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 18ஆம் தேதி சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 50 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதில் 23 லட்சம் ரூபாய், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்கள், பதிவுச் சான்றிதழ்கள், பரிவர்த்தனை ஆவணங்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 15) மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

குறிப்பாக தங்கமணிக்குச் சொந்தமான அதிக இடங்களில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 400-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: வெடிகுண்டு வழக்கு: விடுதலைப் புலிகள் உள்பட எழுவர் விடுதலை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.