ETV Bharat / state

விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் பணி தொடக்கம்

author img

By

Published : Dec 30, 2022, 5:27 PM IST

விசைப்படகுகளில் தகவல் பரிமாற உதவும் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 997 விசைப்படகுகளுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

முதலமைச்சர்
முதலமைச்சர்

பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி
பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் (Transponders) பொருத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 30) தொடங்கி வைத்தார்.

அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீல புரட்சித் திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 997 விசைப்படகுகளுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என்றும் புளூடூத் வாயிலாகவும் இணைத்து அலைபேசி செயலி மூலமாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோல் கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவற்றை குறித்தும் படகிற்கு செய்தி அனுப்ப இயலும். ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.