ETV Bharat / state

காவல் துறை ரீதியான புகார்கள் - சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம் வழங்கி அரசிதழில் வெளியீடு

author img

By

Published : Nov 24, 2022, 1:06 PM IST

காவல் துறைக்குள் வரும் துறை ரீதியான புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறைக்குள் வரும் துறை ரீதியான புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம் - அரசிதழில் வெளியீடு
காவல்துறைக்குள் வரும் துறை ரீதியான புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம் - அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்தச் சட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர் இது தொடர்பான விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாநில பாதுகாப்பு கமிஷன் வருடத்திற்கு ஒரு முறை கூட வேண்டும் எனவும், இந்த கமிஷன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு காவல் துறையில் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை செயல் அமைப்பு கமிட்டி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி நிர்வாகம் மற்றும் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு, ஏடிஜிபி உளவுத்துறை ஆகியோர் இந்த கமிட்டியில் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஜி தலைமையிலான துணை கமிட்டிகளும், மண்டல வாரியாக கமிட்டிகளும், சரக வாரியாக கமிட்டிகளும் அமைப்பது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை பெருநகரத்திற்குத் தனியாக கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி சிபிசிஐடி விசாரிக்கும்: முக்கியமாக காவல்துறையில் உள்ள துறை ரீதியான புகார்களை சிபிசிஐடி விசாரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல் துறையில் அந்தந்த மாவட்டத்தில் மற்றும் மாநகரத்தில் துறை ரீதியான புகார்களை, அங்கிருக்கும் காவல்துறை உயர் அலுவலர்களில் ஒருவர் விசாரணை நடத்துவார்.

தற்போது இந்த அரசிதழ்படி, சிபிசிஐடி காவல்துறை புகார் பிரிவில் புகாரானது அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக ஆறு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி கிளையில் புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அலுவலர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், அதற்கு உண்டான காரணத்தை உரிய முறையில் கூறி தமிழ்நாடு டிஜிபியிடம் அனுமதி பெற பரிந்துரை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு டிஜிபி, அரசிடம் பரிந்துரை செய்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல் துறையினர் மீது பொய் குற்றச்சாட்டு அளித்தால் கடும் நடவடிக்கை: நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.