ETV Bharat / state

சென்னை, டெல்டா மாவட்டங்களில் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றம்!

author img

By

Published : Sep 8, 2021, 7:47 AM IST

சென்னை, டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்து 203 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்கம்பி பாதைகள் புதைவடங்களாக மாற்றுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டிருப்பதாக, எரிசக்தித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANGEDCO
TANGEDCO

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப்.7) தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், “பாதுகாப்பான மின் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் மின்விபத்துக்களை தவிர்ப்பதற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை மாநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மாநகர பகுதிகளில் உள்ள பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு மற்றும் ஐடி காரிடர் ஆகிய ஐந்து கோட்டங்களில் 3,506.33 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி பாதைகளை புதைவடங்களாக மாற்றியும், 39 ஆயிரத்து 766 மின் பெட்டிகளை உள்ளடக்கி ரூ.993.32 கோடி மதிப்பீட்டில் பணிகள் மின் நிதி நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆவடி, அடையாறு மற்றும் ஐடி காரிடர் கோட்டங்களில் பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளன. அதே போல், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மற்றும் விழுப்புரம், கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் மாவட்டங்கள் மழைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இதனால், மின்கம்பங்கள், உயர் மின்கோபுரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டமைப்புகள் சேதமடைகின்றன.

இந்த மாவட்டங்களில் சேதங்களை தவிர்ப்பதற்காக முதல்கட்டமாக ரூ. 210 கோடி மதிப்பீல், 219 கிலோ மீட்டர் தூரத்தில், 33 கி.வாட் உயர் மின் அழுத்த மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் அதிநவீன சைபர் ஆய்வகம் விரைவில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.