ETV Bharat / state

வாணி ஜெயராம் மறைவு: இருள் சூழ்ந்தது இசை உலகம்.! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்..

author img

By

Published : Feb 5, 2023, 8:30 AM IST

Updated : Feb 5, 2023, 10:00 AM IST

புகழ் பெற்ற பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்

சென்னை: இந்திய இசை உலகில் இசைகுயிலாக வலம் வந்தவர் வாணி ஜெயராம் (78). இந்திய திரைத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (பிப். 4) சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் வாணி ஜெயராமிற்கு, 2023 குடியரசு தினத்தையொட்டி “பத்ம பூஷன்” விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் சிறுவயதிலேயே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி. பேருக்கேற்றார் போல் இசை உலகின் கலைவாணி தான்.

டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசைப் பயின்ற வாணி ஜெயராம், வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களை கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வளர்த்துக் கொண்டார். அதன்படி சாதித்தும் காட்டியவர் வாணி ஜெயராம். இசை மீது இவர் வைத்திருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்பெறச் செய்தது. இவரது வெற்றிக்கு கணவர் ஜெயராமின் பங்கு அளப்பறியது.

வாணி ஜெயராம் 1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.

இந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, பெங்காலி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது இனிமையான குரலினால், சுமார் 50 ஆண்டுகளாக இசை உலகில் வலம் வந்தார். 78 வயதை அடைந்த பின்னும், யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள ‘மலை’ திரைபடத்தில், இமான் இசையில் பாடல் பாடியுள்ளார். அதுவே அவரது கடைசி பாடலாக அமைந்தது ரசிகர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவு கூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

  • திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

    — Narendra Modi (@narendramodi) February 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

  • "இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

    1/2 pic.twitter.com/rEJ1odhBbs

    — CMOTamilNadu (@CMOTamilnadu) February 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அண்மையில் அவருக்கு 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகை பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வாணி ஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: Vani Jairam: 'காற்றில் கலந்த கான சரஸ்வதி' வாணி ஜெயராம் குறித்த முழு விபரம்!

Last Updated : Feb 5, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.