ETV Bharat / state

வழி கேட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பிரம்பால் அடித்த காவலர் - வெளுத்துவாங்கிய பொதுமக்கள்

author img

By

Published : Apr 16, 2022, 8:38 PM IST

சென்னையில் வழிகேட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பிரம்பால் தாக்கிய காவலரை, சரமாரியாக பொதுமக்கள் தாக்கியதோடு, அவரைப்பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வழி கேட்ட பார்வையற்றோர்களை பிரம்பால் அடித்த காவலர்
வழி கேட்ட பார்வையற்றோர்களை பிரம்பால் அடித்த காவலர்

சென்னை: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (28). இவரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (36) என்பவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் சென்னையில் ஊதுபத்தி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் திருவல்லிக்கேணி சி.என்.கே சாலை பெல்ஸ் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்றனர்.

அப்போது அங்கே நின்றிருந்த நபர் ஒருவரிடம் ஓவிஎம் தெரு எங்கே உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு அந்நபர் 'என்னிடமே வழி கேட்கிறாயா' எனக்கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கையில் இருந்த பிரம்பை பிடிங்கி, அவர்களையே சரமாரியாக தாக்கியுள்ளார்.

அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தடுத்துள்ளனர். மேலும், ‘ஏன் இவர்களை அடிக்கிறீர்கள்’ என கேட்டுள்ளனர். இதற்கு, ’தான் ஒரு காவலர்’ என்றும்; ’தன்னிடமே கேள்வி கேட்கிறீர்களா’ என பொதுமக்களை அடிக்க வந்தார். உடனே 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்நபரை தாக்கி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை தாக்கிய அந்நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் தண்டையார்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் தினேஷ் குமார் (39) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மருத்துவ விடுப்பில் இருந்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து தினேஷ்குமார் குடிபோதையில் இருந்ததையும் அறிந்த காவல் துறையினர், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் நிஜ டாணாகாரர்கள்..!- காவலர்களின் துயரநிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.