ETV Bharat / state

குறுவை சாகுபடிக்காக கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

author img

By

Published : Jun 30, 2020, 3:55 PM IST

சென்னை : டெல்டா மாவட்டங்களில் முழு அளவில் குறுவை சாகுபடி நடைபெறுவதை உறுதி செய்ய மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk leader ramadoss urge to tn govt for extra water to kharif crops
pmk leader ramadoss urge to tn govt for extra water to kharif crops

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பாண்டில் தான் குறிப்பிட்ட தேதியில் (ஜூன் 12ஆம் தேதி) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து 16ஆம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 நாட்களாகியும் கடைமடைப் பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் திறப்பை வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பதன் மூலம் அடுத்த சில நாள்களில் கடைமடை ஆற்றுப் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்.

அதற்காக அடுத்த இரு வாரங்களுக்கு கூடுதல் நீரைத் திறந்தால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து விடும். அதன் பின்னர் நீர் திறப்பை இப்போதுள்ள அளவுக்கு குறைத்தால்கூட கடை மடை பாசனப் பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதன் மூலம் கூடுதலாக 7 டி.எம்.சி நீர் செலவாகும்.

நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்று உழவர்கள் நம்புகின்றனர். தற்காலிகமாக கூடுதல் நீரைத் திறந்து உழவர்களின் நம்பிக்கையை சாத்தியமாக்குவது அரசின் கைகளில் தான் உள்ளது.

உழவர்களுக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சென்னையில் தீவிரப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.