ETV Bharat / state

"ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 1:41 PM IST

PMK Anbumani Ramadoss Statement: பயிர் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏக்கருக்கு குறைந்தது 30 ஆயிரம் ரூபாயாவது காப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நடப்பாண்டிலும் குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், மூன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் வாடுகின்றன. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

குறுவை பயிர்களுக்கு காப்பீடு: இப்போதும் தமிழகத்தில் நெல் தவிர்த்து மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி போன்ற பிற குறுவை பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறுவை நெற்பயிர்களுக்கும் காப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசு காப்பீட்டை மறுக்கிறது: ஆனால், தமிழக அரசு தான் பயிர் காப்பீடு வழங்க மறுத்து வருகிறது. இது நியாயமல்ல. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியை புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான பங்களிப்பை 49 விழுக்காட்டில் இருந்து 25-30% என்ற அளவுக்கு குறைத்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன. தமிழக அரசு இவற்றைக் கருத்தில் கொண்டே நெற்பயிருக்கான காப்பீட்டை மறுக்கிறது. ஆனால், அதன் பாதிப்பை விவசாயிகள் தான் அனுபவித்து வருகின்றனர்.

2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும்: பயிர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் நெல் விவசாயிக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுடன் ஒப்பிடும் போது, பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு மிக மிக குறைவாகும்.

பயிர் காப்பீடு செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூபாய் 30,000 வரை காப்பீடு கிடைக்கும். ஆனால், தமிழக அரசு அதிக அளவாக ரூபாய் 5000 மட்டுமே நிவாரணம் வழங்கும். அத்தொகை இடுபொருள் செலவுக்குக் கூட ஈடாகாது. நடப்பு குறுவை பருவத்தில், தமிழ்நாட்டில் குறைந்தது 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். ஒன்றரை லட்சம் ஏக்கர் அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூபாய் 25,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: இந்த நிலையில், ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரமாவது இழப்பீடு வழங்கப்பட்டால் தான், உழவர்கள் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். அதற்கு குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதை கருத்தில் கொண்டு குறுவை நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இழப்பீட்டு தொகையாக ரூபாய் 560 கோடி: குறுவை பயிர்களுக்கான காப்பீட்டுத் தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நடப்பாண்டை சிறப்பு நேர்வாக கருதி இம்மாத இறுதி வரை காப்பீட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2022 - 2023 ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 560 கோடி காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்திருக்கிறார்.

7 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ரூபாய் 560 கோடி என்றால், ஒரு ஏக்கருக்கு ரூபாய் 8000 மட்டுமே கிடைக்கும். இது போதுமானதல்ல. பயிர் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏக்கருக்கு குறைந்தது ரூபாய் 30 ஆயிரமாவது காப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘நாங்கள் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்’ - பெண் அர்ச்சகர்கள் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.