ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான தடையை நீக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 5:08 PM IST

Dr Anbumani Ramadoss: தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க தடை விதித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆணையிட வேண்டும் என்று நீக்குக பிரதமருக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி பிரதமருக்கு கடிதம்
பாமக தலைவர் அன்புமணி பிரதமருக்கு கடிதம்

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு தடையை நீக்க வேண்டும்!

    தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க… pic.twitter.com/UnGsmvHg9j

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை மிக அதிகளவில் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் முரணான வகையில், தமிழ்நாடு போன்ற மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கக் கூடாது, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதால் நாடு முழுவதும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான இளநிலை மருத்துவக்கல்வி, புதிய விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16. 8.2023-ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.

இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தமிழ்நாடு, கேரளம் போன்ற வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களையே பாதிக்கும். 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை ஏறக்குறைய 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7 ஆயிரத்து 640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 11 ஆயிரத்து 600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது, அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலுங்கான ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது. இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிய மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குதல், மருத்துவர்களை உருவாக்குதல், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றை மக்கள் தொகையுடன் ஒப்பிடுவதே தவறாகும். மருத்துவக்கல்வியும், மருத்துவ சேவையும் தேவைகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. இதை மருத்துவ ஆணையம் உணர வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் எனப்படுபவை மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கான கல்விக்கூடம் மட்டுமல்ல.

150 எம்.பி.பி.எஸ் இடங்கள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றால், அதனுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனையில், தினமும் ஆயிரத்து 200 பேருக்கு புறநோயாளிகளாக இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும். நூலகங்களில் குறைந்தது 11 ஆயிரம் மருத்துவ நூல்கள் வைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க முடியும். புதிய விதிகள் மூலம் இந்த வசதிகளை பறிக்கக்கூடாது.

இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது அமைக்கப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் மோடித் தலைமையிலான அரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால், உங்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிராக அமைந்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள். மருத்துவக் கட்டமைப்பில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டில் கூட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை.

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அங்கெல்லாம் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ள போது, அதற்கு மருத்துவ ஆணையம் தடை விதிப்பது நியாயமற்றதாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்படும் போது தான், மக்களுக்கு மூன்றாம் நிலை மருத்துவம் (Tertiary care) மிகவும் எளிதாக கிடைக்கும். மக்களுக்கு அவர்களின் வாழ்நாளில் ஆகும் அதிகபட்ச செலவு மருத்துவ செலவு தான். அதற்காக அவர்கள் வாங்கும் கடனை அவர்களின் வாழ்நாள் முழுவதும் அடைக்க முடிவதில்லை.

புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டால், மக்களுக்கான மூன்றாம் நிலை மருத்துவம் இலவசமாக கிடைக்கும். அவர்கள் கடன் வாங்கி மருத்துவம் பெறத் தேவையில்லை. இவற்றை கருத்தில் கொண்டு தான் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்த கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்கள்தொகையின் அடிப்படையில் அல்ல என்பதை தேசிய மருத்துவ ஆணையம் உணர வேண்டும்.

இளநிலை மருத்துவர்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்து மருத்துவக் கல்லூரி எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. முதுநிலை மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் இன்றைய நிலையில் 13 ஆயிரத்து மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு குறைந்தது 3 மன நல மருத்துவர்கள் தேவை. அதன்படி 130 கோடி இந்திய மக்களுக்கு 56 ஆயிரத்து 600 மனநல மருத்துவர்கள் தேவை. ஆனால், தேவையில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே மனநல மருத்துவர்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு 700 மனநல மருத்துவர்கள் மட்டும் தான் உருவாகின்றனர். அதிக எண்ணிக்கையில் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட முதுநிலை மருத்துவர்களை உருவாக்கவும் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் தேவை. உலக அளவில் நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா தான். அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான சிறப்பு மருத்துவர்களை உருவாக்க வேண்டும். அதற்காகவும் அதிக எண்ணிக்கையில் இளநிலை மருத்துவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாத மருத்துவ ஆணையத்தின் ஆணை தவறு.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை. 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் 10 ஆயிரம் மக்களுக்கு 8.6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். கியூபாவில் இந்த எண்ணிக்கை 84.20% ஆகவும், ஸ்வீடனில் 70.62% ஆகவும், கிரீசில் 63.06 %ஆகவும், போர்ச்சுகலில் 60% ஆகவும் உள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு உண்மை, இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை மட்டுமே. இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருத்துவர்கள் பணி செய்வதில்லை. இவர்களையும் சேர்த்து கணக்கீடு செய்வது சரியாக இருக்காது.

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவுக்கு, இந்தியாவில் ஆயுஷ் மருத்துவர்களின் எண்ணிக்கையை கழித்து விட்டால், போதிய எண்ணிக்கையில் நவீன மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மையாகும். 2020 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, உலக சராசரி அளவுக்கு இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், இந்தியாவில் இருக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த வேண்டும்.

அதற்காக இன்னும் 10 லட்சம் மருத்துவர்களை உருவாக்க வேண்டும். அதற்காக, ஆண்டுக்கு 30 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீதம் மருத்துவ கல்வி கட்டமைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், இதை உணராமல் தமிழ்நாடு போன்ற தெற்கு மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், அவை அனைத்திலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே படிப்பதில்லை. இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதனால், மருத்துவக் கல்லூரிகள் போதிய அளவில் இல்லாத வட இந்திய மாணவர்கள் தான் பயனடைகின்றனர். இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பு போதிய அளவில் ஏற்படுத்தப்படாத மாநிலங்களில் மருத்துவர்களை உருவாக்குவதற்கும் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நகர்ப்புறங்களில் தான் ஓரளவு மருத்துவர்கள் உள்ளனர். மொத்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் தான் உள்ளனர். கிராமப்பகுதிகளில் 30 சதவீத்திற்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இந்த நிலையை மாற்றி, கிராமப்புறங்களில் மருத்துவர் எண்ணிக்கையை உயர்த்த திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய தேசிய மருத்துவ ஆணையம், அதற்கு முற்றிலும் எதிராக புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தடைவிதிக்கும் தவறான முடிவை எடுத்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது. மக்கள்தொகையை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு அதிக மக்களவைத் தொகுதிகளை வழங்குவோம், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்ந்தால், அது இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறும்.

எனவே, 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் என்ற விகிதத்திற்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கூடாது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆணையிட வேண்டும். அதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "மது குடிப்போரை திருத்தினால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்" - அமைச்சர் முத்துசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.