ETV Bharat / state

குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகள் - அடிக்கல் நாட்டிய பிரதமர்!

author img

By

Published : Jan 1, 2021, 3:23 PM IST

பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Prime Minister Modi
பிரதமர் மோடி

சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இந்தூர், ராஜ்கோட், சென்னை, ராஞ்சி, அகர்தலா, லக்னோ ஆகிய ஆறு நகரங்களில் எல்.ஹெச்.பி. வீட்டு வசதித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், திரிபுரா முதலமைச்சர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீட்டுவசதி திட்டத்தைச் செயல்படுத்துவதில் வெற்றிகரமான ஆறு மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அவர், "மொத்த மக்கள் தொகையில் 48.45 விழுக்காடு நகர்ப்புறங்களில் வசிக்கும் நாட்டில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது, இதில் 14.63 லட்சம் குடும்பங்கள் நகர்ப்புற சேரிகளில் வாழ்கின்றன. நகர்ப்புற சேரி குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ஒழிப்பதற்காக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சேரி இல்லாத நகரங்களை வகுக்கும் தமிழ்நாடு விஷன் 2023-ஐ வெளியிட்டார்.

குறைந்தபட்சம் 400 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட ஒரு படுக்கையறை, ஒரு ஹால், ஒரு சமையலறை, கழிப்பறை, குளியலறை, ஒரு பால்கனியைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அவை மின்விசிறி மற்றும் மின் பொருத்துதல்களுடன் வழங்கப்பட வேண்டும்.

​​விலைவாசி உயர்வு மற்றும் கரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழப்பதன் காரணமாக ஏழைகளுக்கு வீடு கட்ட தற்போதைய செலவு போதுமானதாக இல்லை. எனவே, ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதலாக 70 ஆயிரம் ரூபாயை வழங்கவும், ஒரு வீடு கட்ட 1.70 லட்சம் ரூபாயிலிருந்து 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 2.5 லட்சம் வீடுகள் கட்ட மாநில அரசுக்கு 1,805 கோடி ரூபாய் செலவாகும்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) இன் கீழ், மொத்தம் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,62,720 மாடி குடியிருப்புகள் மற்றும் 3,42,769 தனிநபர் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்சின் கீழ் இந்திய அரசு 413 சதுர அடி பரப்பளவில் 1,152 குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்துள்ளது. 116.27 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரும்பாக்கத்தில் இந்தத் திட்டத்தில் ஒரு ரேஷன் கடை, இரண்டு அங்கன்வாடி மையங்கள், ஒரு நூலகம், ஒரு பால் பூத், ஆறு கடைகள் போன்ற சமூக வசதிகளும் அடங்கும்.

இந்தத் திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின் துணை நிலையம் ஆகியவை இருக்கும். இந்தப் பணி 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு காலநிலை தரங்கள் மற்றும் பேரழிவு தடுப்பு வீடுகளுக்கு சுற்றுச்சூழல் நட்பு கட்டுமானத்தை உறுதிசெய்யும்.

சென்னை நகரத்தில் நீர்வழிகள், பிற ஆட்சேபனைக்குரிய நிலங்களின் கரையில் வசிக்கும் நகர்ப்புற ஏழை, சேரி குடும்பங்களுக்கு இந்தக் குடியிருப்புகள் ஒதுக்கப்படும். இதுபோன்ற முயற்சிகள், திட்டங்களில் இந்திய அரசுடன் கூட்டு சேருவதில் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சி அடைகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தக்கோரி, முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.