ETV Bharat / state

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 3.99 லட்சம் பேர் பயன்

author img

By

Published : Sep 10, 2021, 1:13 PM IST

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால் இதுவரை மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 817 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் செயல்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, சென்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று, முக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

திட்டத்தின்கீழ் 45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களிலேயே சென்று வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்றுவரை (செப். 9) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

திட்டத்தால் பயன்பெற்றவர்கள்:

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் – 1,76,440

நீரிழிவு நோயாளிகள் – 1,17,117

உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துப் பெட்டகம் – 80,280

நோய் ஆதரவு சிகிச்சை - 12,634

இயன்முறை சிகிச்சை - 13,312

சுய டயாலிசிஸ் - 34 சிறுநீரக நோயாளிகள்

இதன்மூலம் மொத்தமாக மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 817 பேர் பயனடைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய ஆளுநரை வரவேற்று மு.க. ஸ்டாலின் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.