ETV Bharat / state

“புதுக்குடி கிராம மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்” ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் உருக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 8:04 PM IST

srivaikundam railway station: கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 40 மணி நேரத்திற்குப் பின்பு மீட்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று (டிச.20) தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

passengers rescued from Srivaikuntam railway station return to chennai
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு சென்னை திரும்பிய பயணிகள்

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு சென்னை திரும்பிய பயணிகள்

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் பெய்த கனமழையின் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பு பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தின் அடிப்பகுதியிலிருந்த ஜல்லி கற்கள் முழுவதும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

இதையடுத்து கடந்த டிச.17ஆம் தேதி சுமார் 9:15 மணி அளவில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலயத்திற்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலில் சிக்கி இருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் பேருந்து மூலம் மணியாச்சிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று (டிச.19) இரவு புறப்பட்டு இன்று (டிச.20) மதியம் தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பயணி புகழ் கோவன் கூறுகையில், “மழை வெள்ளம் அதிக அளவில் இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்டது. அன்று இரவே பயணிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிடலாம் என நினைத்திருந்தோம். ஆனால், நேரம் செல்ல செல்ல அதிக அளவில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியதால் யாரும் ரயிலை விட்டு இறங்க முடியாத நிலையில் அங்கே மாட்டிக் கொண்டோம்.

இந்த நிலையில் மறுநாள் காலை முதல் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை வைத்து தங்களுக்கு காலை, மதியம், இரவு 3 வேளையும் உணவுகள் சமைத்துக் கொடுத்தனர். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து பேரிடர் மீட்பு படை வந்த பிறகு தான் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்போது சென்னை வந்துள்ளோம். இதில் முதல் இரண்டு நாட்களில் அரசு தங்களை மீட்க வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்த பிறகுதான் மீட்பு படை அதிகாரிகள் வந்தனர்.

அங்கிருக்கும் கிராம மக்கள் அனைவரும் வீட்டிலிருந்த பொருட்களை வைத்துச் சமைத்து எங்களுக்கு வழங்கினர். இதுபோன்று உலகில் வேறு எங்கும் நடக்காது. புதுக்குடி மற்றும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். சென்னையில் பெய்த மழையில் கூட இந்த அளவில் தாங்கள் சிக்கியது இல்லை. ஆனால் அங்கு வெள்ளநீர் அதிகரிக்க, அதிகரிக்க அனைவரும் பயத்தில் இருந்தோம்” என கூறினார்.

இதுகுறித்து ரயிலில் வந்த பயணி சொர்ண காந்தி கூறுகையில், “ரயிலில் மாட்டிக்கொண்ட பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவிற்குப் பாதுகாத்தனர். ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு இருக்கும் அதிகாரிகள் உடனடியாக தங்களை மீட்க வர முடியவில்லை.

இதனால் ரயிலில் மாட்டிக் கொண்டு அவதிக்குள்ளானோம். பின்னர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ஊர் மக்கள் ரயிலில் சிக்கிக்கொண்ட அனைவருக்கும் உணவு, குழந்தைகளுக்குப் பால், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்.

மறுநாள் காலை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த அளவிற்கு மழை பெய்து நாங்கள் பார்த்ததில்லை சென்னையில் இது போன்று பெய்து பார்த்து உள்ளோம். ரயில் நிலையத்தில் ஆறு ஓடுவது போல் மழை நீர் சென்றது” எனக் கூறினார்.

இதுகுறித்து ரயிலில் வந்த பயணி சிவக்குமார் கூறுகையில்,“மழை வெள்ளம் அதிகளவில் இருந்ததால் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 40 மணி நேரம் ரயிலில் தவித்திருந்த நிலையில், முதலில் இரண்டு பேருந்துகள் மூலம் ரயிலில் இருந்த சில பயணிகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அதன் பிறகு மழை வெள்ளம் அதிகமானதால் அந்த பேருந்து மீண்டும் வந்து பயணிகளை அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதனால் ரயிலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே இருந்த புதுக்குடி மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் தங்களுக்கு உணவு, உடை, பால் உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்து உதவி செய்தனர்.

இது போன்ற காட்டாறு செல்லும் நேரத்தில், ரயில் ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தவிர்த்து ரயிலைப் பாதுகாப்பாக நிறுத்தினார். அவர்களுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கினர். அதன்பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் வந்து தங்களைப் பாதுகாப்பாக மீட்டனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: "தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.5,000 கோடி இழப்பீடு தேவைப்படும்" - நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.