ETV Bharat / state

ஜெயலலிதா பெயரில் பல்கலை., தொடர்ந்து நடத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்!

author img

By

Published : Jul 3, 2021, 6:07 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்

அதன் அடிப்படையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க, கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது.

இருட்டடிப்பு செய்யப்படுகிறதா?

இதனிடையே, ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தின் சார்பில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி

அதில்,’ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மாற்றம் என்ற வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதிமுக ஆட்சியில் உருவாக்கியவற்றையெல்லாம் கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒருவேளை ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற வேலைகளில் திமுக ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, ஏழை, எளிய கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற ஏதுவாக, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.