ETV Bharat / state

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு குற்றவியல் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி

author img

By

Published : Jun 24, 2022, 8:33 PM IST

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமூல் வாங்கும் காவல்துறையினருக்கு குற்றவியல் நடவடிக்கை- உயர்நீதிமன்றம் அதிரடி
மாமூல் வாங்கும் காவல்துறையினருக்கு குற்றவியல் நடவடிக்கை- உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் மாமூல் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே. குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது அல்ல என்று கூறி, அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த தண்டனையிலிருந்து மாமூல் பெறுவதை காவல் துறை உயர் அலுவலர்கள் தீவிரமாக கருதவில்லை என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மாமூல் வாங்குவது குற்றம் என்றாலும், அவர்களுக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுவதாகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், அதிருப்தி தெரிவித்தார்.

இந்த சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கச் செய்கிறது என வேதனை தெரிவித்த நீதிபதி, ஊழலை கையாள அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையை நேர்மையான அலுவலர்களை நியமித்து வலுப்படுத்த வேண்டும் எனவும்; மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காவல் துறையினர் மாமூல் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும்; நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறும் துறை ரீதியான நடவடிக்கையை மட்டும் எடுக்காமல், வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடன் தொல்லை - வருவாய் ஆய்வாளர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.