ETV Bharat / state

"கனமழையால் சேதமான நெற்பயிருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்குக"- ஓபிஎஸ் வலியுறுத்தல்!

author img

By

Published : Feb 4, 2023, 1:39 PM IST

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு, ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கனமழையால் சேதமான நெற்பயிருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!
கனமழையால் சேதமான நெற்பயிருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை: இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்கை சீற்றத்தின்போது விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை அளிப்பதற்கான கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. கடந்த 4 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30,000 ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20,000 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாள் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்து.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கு தற்போதுள்ள உற்பத்தி செலவுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைக்க இயலாததன் காரணமாக, நெல்லின் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவராக இருந்போது, ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 2021ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், அவர் விடுத்த கோரிக்கையே அவரால் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது, திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதாவது ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணத்தை இந்த அரசு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாய மக்களிடையே எழுந்துள்ளது. விவசாய மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கும் வகையில் உடனடியாக ஓர் ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட வேண்டும்.

நெல்லின் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதர பயிர்களுக்கு உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.