ETV Bharat / state

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாகத் தேர்வுசெய்யும் சதி - வைகோ கண்டனம்

author img

By

Published : Feb 9, 2021, 11:32 AM IST

சென்னை: மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பணி நியமனம் செய்துவருகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி: வைகோ கண்டனம்
வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி: வைகோ கண்டனம்

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்துவருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை.

வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி
வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாகத் தேர்வுசெய்யும் சதி

தமிழ்நாட்டின் சிறப்புவாய்ந்த பொதுத் துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டுவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் அனைத்து நிலைகளிலும் தேர்வுசெய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், என்எல்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (GET-Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள், மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வுசெய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டிருக்கிறது.

பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.

ஜி.இ.டி. (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்எல்சியில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அலுவலர்களாகப் பணியில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு விழுக்காடு குஜராத், உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மண்ணின் மைந்தர்களுக்கு பணி
மண்ணின் மைந்தர்களுக்குப் பணி

மண்ணின் மைந்தர்களுக்குப் பணி

என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாகத் தேர்வுசெய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

என்எல்சி நிறுவனம் தேர்வுசெய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்குப் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.