ETV Bharat / state

11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

author img

By

Published : Dec 15, 2022, 1:09 PM IST

தமிழ்நாடு மின் வாரியத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

எங்கே..? புதியதாக தொடங்கப்பட்ட 11 மின் பகிர்மான கோட்டங்கள்!
எங்கே..? புதியதாக தொடங்கப்பட்ட 11 மின் பகிர்மான கோட்டங்கள்!

சென்னை: எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை, இன்று (டிச.15) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது. உதாரணமாக தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6,79,239 மின் இணைப்புகளும், கூடலூர் கோட்டத்தில் குறைந்தபட்சமாக 68,022 மின் இணைப்புகளும் உள்ளன.

எனவே பணிகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில், நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகளை சமநிலைப்படுத்துவதற்காகவும், நிர்வாக பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும்,

அன்றாட நடவடிக்கைகளில் வேலையை துரிதப்படுத்துவதற்காகவும், மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டும், பொதுமக்களின் புகார்களின் மீது உடனடி தீர்வு காண்பதற்காகவும், அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் விரைந்து செயல்படுத்துவதற்காகவும், மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள 176 மின் பகிர்மான கோட்டங்களுடன், கூடுதலாக 11 மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவைகள் சேப்பாக்கம் (சென்னை), சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் (செங்கல்பட்டு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பென்னாகரம் (தர்மபுரி), திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம்), ஊத்துக்குளி (திருப்பூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), ஜெயங்கொண்டம் (பெரம்பலூர்), சாத்தூர் (விருதுநகர்) கெங்கவள்ளி (சேலம்) ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: TN Cabinet Expansion: தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; யார் யாருக்கு என்ன பொறுப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.