ETV Bharat / state

"விமானப் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் போர்டிங் பாஸ் வழங்கும் திட்டம்"

author img

By

Published : Jan 19, 2023, 9:45 PM IST

சென்னை விமான நிலைய பயணிகளின் லக்கேஜ்களை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே ஸ்கேன் செய்து, போர்டிங் பாஸ் வழங்கும் புதிய திட்டம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

New
New

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலும், சர்வதேச முனையத்திலும் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வருகையை விட, புறப்பாடு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தப் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து போர்டிங் பாஸ்கள் வழங்குவதில் கூட்ட நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்படும் நிலை உருவாகிறது. அதேபோல் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்ய சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, சென்னை கோயம்பேடு, உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, ஆலந்தூர், திரிசூலம் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் விமானப் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து அங்கேயே போர்டிங் பாஸ் வழங்குவது குறித்து ஆலோசனை செய்தனர்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நேற்று(ஜன.18) மாலை நடந்தது. சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மெட்ரோ ரயில் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், சிஐஎஸ்எப் அதிகாரிகள், பிசிஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா ஏர்லைன்ஸ்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே விமான பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கலாம் என ஒருமனதாக முடிவு செய்தனர். அதன்படி, வரும் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதில், விமானப் பயணிகளின் செக்கின் பேக்கேஜ்களை மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிசோதித்து பயணிகளுக்கு லக்கேஜ் செக்கின் சான்றிதழ் வழங்கப்படும். பயணிகள் தங்களுடைய செக்கின் பேக்கேஜ்களை மெட்ரோ ரயில் நிலைய சோதனை இடத்திலேயே ஒப்படைத்துவிட்டு, அவர்கள் கைகளில் எடுத்து கொண்டு வரும் லக்கேஜ்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிடலாம். இதனால் பயணிகள் லக்கேஜ்களை விமான நிலையத்திற்கு சுமந்து வரும் பணியும் குறையும்.

அதோடு சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து போர்டிங் பாஸ் வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தெந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்திலிருந்து இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என்றும், முதற்கட்டமாக சென்னை உள்நாட்டு முனையத்திலும், பின்னர் சர்வதேச முனையத்திலும் விரிவு படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாகப்பதிவு - நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.