ETV Bharat / state

மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

author img

By

Published : Feb 8, 2022, 3:28 PM IST

சில மாணவர்களை கல்லறைக்கும் சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் கொண்டு சென்ற இந்த நீட் தேர்வு தேவையா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களை கல்லறைக்கும் கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - ஸ்டாலின்
மாணவர்களை கல்லறைக்கும் கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் இன்று (பிப் 08) சென்னை தலைமைச்செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக, பாமக, பாஜக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேரவையில் பேசிய முதலமைச்சர், 'ஜனநாயகம் காக்க கூட்டாட்சியைக் காக்க, கல்வி உரிமையை நிலைநாட்ட நாம் கூடியுள்ளோம்.

எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதியை நிலைநாட்டியது இந்த சட்டப்பேரவை.

69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் முறையில் செயல்படுத்திய மாநிலமும் தமிழ்நாடு தான். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் இந்த சட்டப்பேரவைதான். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைகளை நடத்திக்கொண்டிருந்தோம்.

மருத்துவக் கனவின் தடுப்புச்சுவர்

இன்று நீட் எனும் சமூக அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையால் முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு இன்று நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். மாணவர்களின் மருத்துவ கனவை நிலைநாட்டிட, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பாதுகாக்க நாம் கூடியுள்ளோம்.

இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கிய தேர்வு தான் நீட் தேர்வு. நீட் தேர்வு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானது.
நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவில் தடுப்புச் சுவரை எழுப்புகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, வினாத்தாள் திருடுவது உள்ளிட்டப் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன.

நீட் தேர்வு வானத்தில் இருந்து குதித்தது அல்ல. ஏழை எளிய மாணவர்களை ஓரங்கட்டக்கூடியது. நீட் தேர்வு ஒரு பலிபீடம். ஆளுநர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

ஏ.கே. ராஜன் குழு அறிக்கை

சுமார் ஒருலட்சம் பேரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஏ.கே. ராஜன் குழு அறிக்கையைத் தயாரித்து அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கான புள்ளி விவரங்கள் ஏ.கே. ராஜன் அறிக்கையில் உள்ளது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, பட்டியலினத்தோர் இந்த தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நீட் தேர்வுக்கு முன்பு, 90 விழுக்காடு மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். சட்ட மசோதா திருப்பி அனுப்பியதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது. மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானத்தை நியமன பிரதிநிதி எந்த வகையில் திருப்பி அனுப்ப முடியும்.

மாநில சட்டப்பேரவையிலுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தின் அடிப்படையிலேயே நீட் விலக்கு மசோதாவை இயற்றினோம். இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சில மாணவர்களை கல்லறைக்கும் சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா?

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான நீட்

ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எதிரானது என்பதை இவ்வளவு நேரம் நான் வாதிட வேண்டி இருக்கிறது என்பதே வேதனையாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது நீட் தேர்வு. ஆளுநர் உண்மையில் புரிந்துகொள்ள மறுக்கிறார்.

வெற்றிபெறும் வரை இந்தப்போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நீதிக் கட்சியின் கொடை தான் மாநில சுயாட்சி. கூட்டாட்சி தத்துவம் தலைகுனிந்து நிற்கிறது. மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது ஆளுநரின் செயல்.

இந்த தீர்மானத்தின் மூலம் இந்தியாவிற்கே ஒளி விளக்கை ஏற்றி வைக்கிறோம். காலம் தாழ்த்தாமல் ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைப்பார் என நம்புகிறேன். தன் சொந்த கொள்கைக்கு எதிரானது என பார்க்காமல் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி இனியாவது ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்று தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளது.

இதையும் படிங்க: வேளாண் சட்டம்போல நீட் சட்டமும் திரும்பப் பெறப்படும் - அழகிரி நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.