ETV Bharat / state

83 எம்பிபிஎஸ் இடங்கள் காலி; செப்.30-க்குப் பிறகான மாணவர் சேர்க்கை செல்லாது - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 9:38 AM IST

Updated : Oct 21, 2023, 9:54 AM IST

NMC: தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு
செப்.30ஆம் தேதி பிறகு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 83 இடங்கள் காலியாக உள்ள நிலையில்,
2023-2024 ஆம் கல்வியாண்டில் இனிமேல் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மகாராஷ்டிரா, பீகார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கை செல்லாது எனவும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி இருந்த நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-2024ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 105-இல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் 14,600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8,316 இடங்களும், நிர்வாக ஒதுகீட்டில் 2,032 இடங்களும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது. எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான 4 சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என 17 இடங்கள் காலியாக உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,172 இடங்கள் நிரப்புவதற்கு தேசிய மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவிற்கு அனுமதிக்கப்பட்டன. அதில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான 4 சுற்று கலந்தாய்வும் முடிவுற்ற நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும் காலியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக்கெடு அக்டோபர் 3ஆம் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே, அவர்கள் அனுமதி தரும் வரையில், எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க முடியாது என அறிவித்தது.

அக்டோபர் 13ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு 30 செப்டம்பர் 2023க்குள், நடப்பு கல்வியாண்டில், இளங்கலை (MBBS மற்றும் BDS) மருத்துவ சேர்க்கைக்காக, தமிழ்நாடு மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் (DGHS) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நான்கு சுற்று கவுன்சிலிங்கை முழுமையாக நிறைவு செய்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. மேலும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மாநில அரசால் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 16 இடங்கள் DGHS இன் MCC-இன் கவுன்சிலிங்கின் முடிவில் இன்னும் காலியாக உள்ளது.

மேலும், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் (மேலாண்மை ஒதுக்கீடு) காலியாக உள்ளன. ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம்.

மேலும், இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக, மாணவர்களுக்கும், நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சாதகமான பதிலைப் பெறுவோம் என்று நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குஜராத்தில் ஒருவர் கைது!

Last Updated : Oct 21, 2023, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.