ETV Bharat / state

சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றம்

author img

By

Published : Aug 30, 2022, 5:31 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

சென்னை மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்
சென்னை மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த மாமன்றக் கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்களைப் பொறுத்தவரையில், மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க அனைத்து மண்டலங்களிலும் உள்ள வணிக வளாக கடைகளில் காலியாக உள்ள கடைகளை, ஒரே முறையில் மெகா ஏலம் விடுவதற்கு அனுமதி கோரும் தீர்மானம்;

மண்டலம் 4,7 மற்றும் 15இல் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தொடங்க அனுமதி கோரும் தீர்மானம்; வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து தட சாலைகளில் ஏற்படும் குழிகள் மற்றும் பள்ளங்களை சரி செய்ய ஒப்பந்தம் கோரும் அனுமதிக்கான தீர்மானம்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வழக்குகளை கையாளுவதற்கு மாதாந்திர தொடர் கட்டணத்துடன் நிலை வழக்கறிஞரை நியமிக்க அனுமதி; மண்டலம் 6,8,10,13இல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான குறிப்பிட்ட நிலங்களை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதி;

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறித்து வழங்கப்பட்ட அரசாணை பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த அனுமதி கோரும் தீர்மானம்; மூன்று விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அனுமதி கோரும் தீர்மானம்;

சென்னையில் துருப்பிடித்த மற்றும் பழுதடைந்த தெருவிளக்கு கம்பங்களை புதியதாக மாற்றியமைக்க நிர்பயா நிதி மூலம் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம்; சைதாப்பேட்டை பஜார் சாலை சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை நிறுவுவதற்கான தீர்மானம் என 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.