ETV Bharat / state

ஆடம்பர திருமண ஆசை : மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் கைது!

author img

By

Published : Dec 7, 2022, 8:33 PM IST

சென்னையில் திருமணத்துக்காக லட்சக் கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த தாய் மற்றும் மகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வரம்பை மீறிய கடன்: மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் கைது!
வரம்பை மீறிய கடன்: மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் கைது!

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் உதயகுமார் (50) - ரெஜி குமார் (47) தம்பதி. இவர்களுக்கு ஜூலி (25) என்ற மகள் உள்ளார். இவர்களில் உதயகுமார் கடந்த 2014ஆம் ஆண்டு இறந்துவிட்டார். மேலும் ரெஜி குமார் எல்ஐசி ஏஜென்டாகவும், ஜூலி சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ரெஜி குமார், மகளுக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சையது கலில் அகமது என்பவரிடம் நான்கு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், மோகன் என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாயும், பிரேமாவிடம் ஒரு லட்சத்து 44,000 ரூபாயும், அப்துல் ரகுமானிடம் ரூ.80,000 மற்றும் மணிகண்டனிடம் 37,000 ரூபாய் என 11 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அதிகமான வரதட்சணை மற்றும் கார் ஆகியவற்றுடன் ஜூலிக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற சில மாதங்கள் கழித்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

அப்போது, ‘பணம் எல்லாம் தர முடியாது. நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக்கொள்’ என ரெஜி குமார் கூறியுள்ளார். மேலும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக மோகன், ஜீவரத்தினம் மற்றும் கவிதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல் துறையினர், மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா மற்றும் ரெஜி குமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலரும் கிழக்கு தாம்பரத்தில் மீன் வாங்குவதற்காக வந்த ரெஜி குமாரை வழிமறித்து வாங்கிய கடனை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த சேலையூர் காவல் துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமணத்துக்காக பலரிடம் 11 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று ரெஜி குமார் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாய் ரெஜி குமார் மற்றும் மகள் ஜூலி ஆகிய இருவரையும் கைது செய்து ஆலந்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு; கோயிலில் சாமி ஆடுவதில் முன்விரோதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.