ETV Bharat / state

BE, B.tech Counselling: கேள்விக்குறியான 3,590 அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவு!... அரசின் விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 8:50 AM IST

Engineering Adimission: பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், 4 ஆயிரத்து 466 பேர் கலந்து கொள்ளும் நிலையில், வெரும் 876 இடங்கள் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Engineering Adimission
கேள்விக்குறியான 3,590 அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவு

சென்னை: தமிழ்நாட்டில் பிஇ மற்றும் பிடெக் போன்ற பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது அதில் தகுதிப்பெற்ற 4 ஆயிரத்து 466 மாணவர்களுக்கு துணைக் கலந்தாய்வில் 876 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரத்து 590 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

மாணவர்களின் இந்த நிலைக்கு பள்ளிக்கல்வித்துறை பொறுப்பேற்குமா? என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களை இலவசமாக படிக்க வைப்பதாக கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான கனவை அரசு நிறைவேற்றுமா? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

தரவரிசை பட்டியலில் முதன்மை காட்டிய மாணவ மாணவிகள் : தற்போது பொறியியல் படிப்பில் சேர்தவதற்கான தரவரிசைப் பட்டியலில் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி வேதலட்சுமி முதலிடத்ததையும், 199 மதிப்பெண்கள் பெற்று ராம் பிரசாத் 2ஆம் இடத்தையும், 198.5 மதிப்பெண்கள் பெற்று துருவன் என்பவர் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தொழிற்கல்விப் பிரிவில் 176.5 மதிப்பெண் பெற்று முகமது தோபிக் முதலிடத்தையும், மணிகண்டன் 165.5 மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்தையும், 165 மதிப்பெண் பெற்று முனிஸ்வரன் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், பிரியதர்ஷ்ணி 188.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ராஜஸ்ரீ, இந்துமதி 187 மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்தையும், கலைவாணி 185 மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் தில்லுமுல்லு வேலையா ? : மேலும், 7.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெற்ற ஏராளமான மாணவர்களை, தனியார் கல்லூரிகள் ஏமாற்றி சேர்க்கை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பொறியியல் பிஇ, பிடெக் படிப்பில் 3ஆம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தப் பின்னரும், 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 442 கல்லூரியில், 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

மாணவர்கள் சேராத கல்லூரிகளின் நிலை? : மேலும் 61 கல்லூரியில் 10 சதவீத்திற்கும் குறைவான மாணவர்களும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கல்லூரிகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உருவாகி இருப்தாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான துணைக் கலந்தாய்வு என்பது, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை சேர்ப்பதற்காகவும், வேறுப் படிப்பில் சேர்வதற்கு காத்திருந்து இடம் கிடைக்காத மாணவர்களும் பொறியியல் படிப்புகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாகவும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் முறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி எஸ்சி, எஸ்டி (SC ST) மாணவர்களுக்கான முழு கல்வி உதவித் தொகையும், ஒற்றை சாளர முறையில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு : இதனால் ஏற்கனவே நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து வந்த மாணவர்கள், துணைக் கலந்தாய்வின் போது ஒற்றை சாளர முறையில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்பில் வழங்குவது போல் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரையின்படி 2022 ஆம் ஆண்டு முதல் தொழிற்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் அரசே செலுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் இடங்களை தேர்வு செய்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.

3 ஆயிரத்து 590 மாணவர்களின் கல்வி கேள்விக்குறி : அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்கிறார்களா? என்பதை பள்ளிக்கல்வித்துறை பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் கண்காணிக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, துணைக் கலந்தாய்விற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 466 மாணவர்கள் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியியல் பிரிவில் 788 இடங்களும், தொழிற்கல்விப் பிரிவில் 88 இடங்களும் என மொத்தம் 876 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனால் 3 ஆயிரத்து 590 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. மாணவர்களின் இந்த நிலைக்கு பள்ளிக்கல்வித்துறை பொறுப்பேற்குமா? என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது.

மாணவர்களின் சான்றிதழ்களை தனியார் கல்லூரிகள் பெறுவது ஏன்? : இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் போதுமான அளவிற்கு மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். அதே நேரத்தில் 250க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு பெரும்பாலும் விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கல்லூரிகளில் மிக மிக குறைவான சேர்க்கையே நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மாணவர்களை ஏமாற்றி தங்கள் கல்லூரிகளில் சேர வைக்கும் முயற்சிகளை ஒவ்வொரு ஆண்டும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் மாணவர்களுக்கு உதவுவது போல், அவர்களுடைய சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அவர்களே விண்ணப்பமும் பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தகுதி வாய்ந்த மாணவர்கள் சேர்கிறார்களா? : அதன்படி இணையதளத்தில் பதிவு செய்யும்போது, தங்களது கல்லூரிகளை முதலில் பதிவு செய்து மாணவர்களை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளில் கூட 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தகுதி வாய்ந்த மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக பொறியியல் சேர்க்கைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "பொறியியல் படிப்பில் துணைக் கலந்தாய்விற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சேர்வதற்கு காரணம், அவர்கள் வேறுப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தும் அதில் சேராமல், பொறியியல் படிப்பில் விரும்பி சேர விண்ணப்பம் செய்திருக்கலாம்.

மேலும் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவதால் தனியார் கல்லூரிகளும் மாணவர்களின் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொண்டு, தற்பொழுது சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்திக்கலாம். எனவே மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பாதுகாப்பு முறைகளையும் மாற்றி அமைக்கலாம்" எனத் தெரிவித்தார். துணைக் கலந்தாய்வில் பொதுப்பிரிவின் கல்வியியல் பிரிவு மாணவர்களுக்கு 50 ஆயிரத்து 514 இடங்களும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 31 இடங்களும் என மொத்தம் 52 ஆயிரத்து 545 இடங்கள் உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியியல் பிரிவில் 788 இடங்களும், தொழிற்கல்விப் பிரிவில் 88 இடங்களும் என மொத்தம் 876 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுக்களில் முதல் முறையாக யுஜிசி உறுப்பினர் - ஆளுநர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.