ETV Bharat / state

'குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லை; ஆனால்...' - பீடிகை போட்ட ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : May 24, 2022, 5:42 PM IST

Updated : May 24, 2022, 7:38 PM IST

குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் இல்லை; தமிழ்நாட்டிலும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழகத்திலும் இல்லை - ராதாகிருஷ்ணன் தகவல்!
குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழகத்திலும் இல்லை - ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் இன்று (மே 24) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதில், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய்ப்பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இந்நோய்ப் பரவல் ஏற்பட்டால் சிகிச்சையளிப்பது குறித்து மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து ஆராய்ந்தார். மேலும், குரங்கு அம்மை நோயின் தன்மை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும், பிற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விளக்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்மூலம் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகைகள் உள்ளதால், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஒமைக்ரான் பிஏ4 வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிப்பில்லை. கரோனா தொற்று முடிவடைந்துவிடவில்லை. எனவே, பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 97 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

43.96 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை நோய்ப்பாதிப்பு இல்லை. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் பரவிய குரங்கு அம்மை நோய், தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சருடைய அறிவுறுத்தலின் பேரில், குரங்கு அம்மை நோய்ப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் சுத்தமற்ற தண்ணீரை உட்கொள்வதால் டெங்கு நோய் தொற்று பரவும். தற்பொழுது 87 பேர் மட்டுமே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது.

'குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லை; ஆனால்...' - பீடிகை போட்ட ராதாகிருஷ்ணன்!

கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அலுவலர்கள் மெத்தனமாக இருக்காமல், கவனமுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு

Last Updated : May 24, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.