ETV Bharat / state

‘3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்’ - ஸ்டாலின்

author img

By

Published : Dec 18, 2020, 1:13 PM IST

சென்னை: புதிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் வரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும் - ஸ்டாலின்
மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும் - ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று (டிச. 18) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நிறைவுபெறும்.

உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிவைத்து உரை ஆற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறது.

அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி – வற்புறுத்தி - கோரிக்கையை வைத்து தலைநகர் டெல்லியில், இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் – குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு, மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.

ஒரு நாள்... இரண்டு நாள் அல்ல, இன்றோடு (டிச. 18) 23 நாள்கள் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, தமிழ்நாட்டின் சார்பில் நாமும் நம்முடைய ஆதரவைத் தெரிவித்திட வேண்டும் என்று முடிவுசெய்து தொடர்ந்து நாம் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உண்ணா நோன்பு என்கிற அறப்போராட்டத்தை அறிவித்து, நாம் இன்று (டிச. 18) நடத்தவிருக்கிறோம்.

மேலும், கரோனா காலத்தைப் பயன்படுத்தி, பாஜக அரசு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றிவருகின்றது. குறிப்பாக மூன்று வேளாண் சட்டம், புதிய மின்சார திருத்த சட்டம், சுற்றுச்சூழல் திருத்த சட்டம் என அனைத்தும் மக்களுக்க எதிரானது.

போராடும் விவசாயிகளை தீவிரவாதி, அந்நிய சக்தி என்று தெரிவித்துவருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதை திரும்ப பெறும் வரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தொடரும், அடுத்தக்கட்டமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் போராடி உயிரிழந்த 21 விவசாயிகளுக்கு திமுக உண்ணாநிலைப் போராட்டத்தில் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க...விவசாயிகளுக்கு ஆதரவு: திமுக தலைமையில் பட்டினிப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.