ETV Bharat / state

ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 11, 2023, 3:28 PM IST

தமிழ்நாடு முழுவதும் 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்து, ரூ.54 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.11) அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார்.

54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்: விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றினை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட பத்து மாவட்டங்களின் பதினெட்டு இடங்களில் 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் ரூ.238.07 கோடி மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் பணி முடிக்கப்பட்ட, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள்: பொது விநியோக திட்டப் பொருள்களைச் சேமித்து வைத்திட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டங்களில் வட்ட செயல்முறைக் கிடங்குகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-23ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், உணவு தானியங்களைச் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள் 28,000 மெ.டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,

  • சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • சிங்கம்புணரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும்,
  • அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும்,
  • ஆண்டிமடம் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • பேரணாம்பட்டு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும்,
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும்,
  • நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும்,
  • சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5.30 கோடி மதிப்பீட்டிலும்,
  • திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 28,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்டச் செயல்முறை கிடங்குகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதன்மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாக அந்தந்த வட்டத்திற்குள்ளேயே சேமித்து வைத்துக் காலதாமதமின்றி நகர்வு செய்திட இயலும். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.. ஈபிஎஸ்க்கு எதிராக வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.