ETV Bharat / state

பல்கலைக் கழகங்களில் 50 சதவீதம் இடங்கள் காலி - உயர்கல்வித்துறை மூலம் நிரப்ப நடவடிக்கை

author img

By

Published : Jul 24, 2023, 5:26 PM IST

தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள 50 விழுக்காடு ஆசிரியர், ஆசிரியர் இல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, பல்கலைக்கழகங்களில் ஒரேமாதிரியான பாடத்திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், மாநில கல்விக் கொள்கை, பல்கலைக் கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்கள் 13ல் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 297 அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் காலியிடங்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் 342, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 205, அண்ணா பல்கலைக் கழகத்தில் 304, பாரதியார் பல்கலைக் கழகத்தில் 59, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 100, மதர்தெரசா பல்கலைக் கழகத்தில் 13 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

மேலும், அழகப்பா பல்கலைக் கழகத்தில் 104, மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 72, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 26, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 30, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் 10 ஆசிரியர் பணியிடங்கள் என 1265 நிரந்தரப் பணியிடங்கள் காலியாக உள்ளது. 13 பல்கலைக் கழகத்திற்கும் அனுமதிக்கப்பட்ட 2ஆயிரத்து 297 இடங்களில் 55 விழுக்காடு இடங்களில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். தற்பொழுது பல்கலைக் கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர்.

அதேபோல் ஆசிரியர் அல்லாத பணிகளை மேற்கொள்வதற்கு மாநிலப் பல்கலைக் கழகம் 13க்கும் 6ஆயிரத்து 749 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் சென்னை பல்கலைக் கழகம் 935, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் 650, அண்ணா பல்கலைக் கழகம் 891, பாரதியார் பல்கலைக் கழகம் 315, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 243, அழகப்பா பல்கலைக் கழகத்தில் 89, மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 86, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 99 என 3394 அலுவலக பணியாளர் இடங்களும் காலியாக உள்ளது.

இவற்றில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் உபரியாக உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியார்கள் இடங்களை சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்டவற்றில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பியுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் சென்னை, மதர்தேராசா, மனோன்மனியம் சுந்தரனார் ஆகியவற்றில் நிரந்தரப் பதிவாளர்கள் உள்ளனர். மற்ற 10 பல்கலைக் கழகங்களில் பதிவாளர் பொறுப்புகளில் உள்ளனர். தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் மதர் தெராசா பல்கலைக் கழகத்தில் மட்டுமே நிரந்தரமாக உள்ளார். மற்ற 12 பல்கலைக் கழகங்களில் பொறுப்பில் உள்ளனர். இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கும் குழு அமைத்து தகுதியானவர்களை நிரப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி வரும் ஆக.23 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று வரவேற்று, விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 24 ஆம் தேதி என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

தற்போது பதிவாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஆக.23 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, அனுபவம், ஊதியவிகிதம், விண்ணப்பிக்கும் விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் இணையத்தளத்தில் www.tnou.ac.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி பல்கலைக் கழகங்களில் உள்ள முக்கியமான பதவிகளும் காலியாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "மணிப்பூர் கலவரம் நடந்திருப்பது மத வெறியால் மட்டுமே" - ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.