கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு.. 11 ஆயிரம் பேர் பங்கேற்பு - அமைச்சர் மா.சு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 18, 2024, 8:26 PM IST

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு

Minister ma subramania: சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சுகாதாரத் துறை மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ரூ.21.53 கோடி செலவில் குழந்தைகள் நலத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 6 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து இதுவரை 100 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளும் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்கு முன்னாள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

1000 குழந்தைகளுக்கு 13 என்கின்ற இறப்பு விகிதம் தற்போது 1000 குழந்தைகளுக்கு 8.2 என்கின்ற விகிதமாக குறைந்து இருக்கிறது. சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு இத்தகவலினை வெளியிட்டிருக்கிறது. இன்னமும் கூட குழந்தைகளின் இறப்பினை குறைப்பதற்கு பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுள் ஒன்றான தாய்ப்பால் வங்கிகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் (Laminar Flow) வழங்கி பலப்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 78 உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு தாய்ப்பால் வங்கிகளுக்கு தாய்ப்பால் வழங்கிக் கொண்டிருக்கும் தாய்மார்களை பாராட்டும் வகையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் சிசு இறப்புகளை மேலும் குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குழந்தைகளின் நலனை வீட்டிற்கே தேடிச் சென்று கண்காணிப்பதற்காக சிறு குழந்தைகளை பராமரிப்பதற்கு 2650 கிராமப்புற சுகாதார பணியாளர்கள் (ஆஷா) கிராமப்புற தன்னார்வலர்களும், 54,439 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இத்திட்டத்தின்கீழ் 2 வயதிற்குட்பட்ட எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் வீடுகளுக்குச் சென்ற பிறகு ஒவ்வொரு குழந்தைகளையும் 5 முறை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே தேடிச்சென்று அக்குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் இப்பணியாளர்களுக்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது.

இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவம் தொடர்பான மாநாடு நடத்தப்பட்டதில்லை. ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட்டு 21ஆம் தேதி வரை 3 நாட்கள், வர்த்தக மையத்தில், சுகாதாரத் துறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், மருத்துவ ஆய்வு கட்டுரைகளை விவாதிப்பதற்காகவும், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் 11,000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். புதுடெல்லி, மேற்கு வங்காளம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மேகாலயா, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 182 மருத்துவ துறையினை சார்ந்த பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

மேலும், மருத்துவ மாணவர்களுக்கு எண்டோ பயிற்சி திட்டமும், பொதுமக்களுக்கு மேமோகிராம் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் 600 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்களை வெளியிடவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "முதலமைச்சரின் மனைவி ராமர் கோயிலுக்கு வருகிறார்.. தந்தை அரசியல் வேறு... மகன் அரசியல் வேறு" - வானதி சீனிவாசன் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.