ETV Bharat / state

'உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்தார்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Feb 3, 2021, 6:37 PM IST

சென்னை: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீட்டிற்கு செல்ல உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister kamaraj
அமைச்சர் காமராஜ்

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர் வீட்டிற்கு திரும்பவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ’அமைச்சர் காமராஜ் கரோனா தொற்றினால் ஜனவரி மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் 11ஆம் தேதி வரை சிகிச்சை மேற்கொண்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து எம்ஜிஎம் மருத்துவர்கள் குணமடைய செய்துள்ளனர்.

அமைச்சர் காமராஜ் மறுபிறவி எடுத்துள்ளார். தற்போது முழு நலமுடன் உள்ள அமைச்சர் காமராஜ், இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வீட்டிற்கு செல்ல உள்ளார். மூன்று வாரங்கள் கழித்து அவர் மக்கள் பணியில் ஈடுபடுவார். கரோனா தொற்றினால் 95 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. இவரின் சிகிச்சை ஒரு அனுபவப் பாடமாக அமைந்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போதும் களத்தில் இறங்கி பணியாற்றியவர். மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் காமராஜ் ஒரு உதாரணமாக விளங்கினார்’ எனப் புகழாரம் சூட்டினார்.

தனது தந்தை குறித்து அமைச்சர் காமராஜ் மகன் இனியன் கூறுகையில், ’கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த எனது தந்தைக்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து அதிக அளவில் நோயாளிகளை குணமடைய செய்த சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம்.

அங்கு அவருக்கு நன்றாக சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு சரியான நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய மருந்தினை அளித்ததால் தற்போது அவரை காப்பாற்ற முடிந்தது. எனது தந்தையை மேல் சிகிச்சையில் எக்மோ அளிப்பதற்காக இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். ஆனால் அது தேவைப்படவில்லை.

அவரது உடல்நலம் நாளுக்குநாள் முன்னேற்றமடைந்து குணமடைந்து. தினமும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்னை போன் மூலம் தொடர்ந்து அழைத்து நலம் விசாரித்தனர். அவர் உடல்நலம் பெற வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றி’ என்றார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தர்மபுரி சார் ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.