ETV Bharat / state

'கருத்துக்கணிப்பு அனைத்துமே திமுகவினர் பணம் கொடுத்து வெளியிட்டது'

author img

By

Published : Mar 23, 2021, 5:16 PM IST

சென்னை: ராயபுரத்தில் மேளதாளம் முழங்க அமைச்சர் ஜெயக்குமார் ரிக்‌ஷாவில் சென்றும், வீடு வீடாக நடந்து சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கருத்துக்கணிப்பு அனைத்துமே திமுகவினர் பணம் கொடுத்து வெளியிட்டது எனத் தெரிவித்தார்.

minister-jayakumar
அமைச்சர் ஜெயகுமார்

சென்னை ராயபுரம் தொகுதிக்குள்பட்ட சீனிவாசபுரம், போஜராஜன் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் ரிக்‌ஷாவில் சென்றும், வீடு வீடாக நடந்துசென்றும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேளதாளம் முழங்க, தொண்டர்கள் நடனமாடியபடியே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ராயபுரத்தில் மேளதாளம் முழங்க அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில், கருத்துக் கணிப்பு எடுக்கும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து அவர்களுக்குச் சாதகமாக முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது எந்த வகையிலும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்காது.

திமுகவின் நேற்றையக் கூட்டமும், அங்கு பேசிய ஸ்டாலினின் பேச்சும் என்னுடைய வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. ராயபுரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவராலும் அறியப்பட்டவன் நான். என் மீது இருக்கும் பயத்தினால்தான் ஸ்டாலின் உள்பட 9 திமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் நடத்தப்பட்டது.

அமைச்சர்களின் வாகனம் மீதான தாக்குதல்களுக்குத் திமுகவினரே மூலகாரணம். பரப்புரையின்போது அவர்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையில், போஜராஜன் நகரில் உள்ள தேநீர்க் கடையில் தேநீர் குடித்துவிட்டு பரப்புரையைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் மேற்கொண்டார். இதில் பாஜக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளர் வன்னியராஜ், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.