ETV Bharat / state

"அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்" தூண்டில் வீசினாரா துரைமுருகன்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

author img

By

Published : Apr 10, 2023, 1:38 PM IST

சட்டப்பேரவையில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய பொள்ளாச்சி ஜெயராமனுக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில் அமைச்சர் பொள்ளாச்சிக்காரர் என்றும், அவர்கள் காலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காததில் தனக்கு வருத்தம் என்றும் பேசியது சிரிப்பலையை எழுப்பியது.

Minister DuraiMurugan answered Pollachi Jayaraman questions on Parambikulam Aliyar Project in tn Assembly
அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் குறித்த பொள்ளாச்சி ஜெயராமன் கேள்விகளுக்கு பதிலளித்தார்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

"அரசியல் கட்சிகள் 60 ஆண்டுகாலமாக தேர்தல் அறிக்கைகளில் ஆணைமலையாறு - நல்லாறு திட்டம் அமைக்கப்படும் என்று கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் வாக்குறுதி அளித்தனர். 60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதன்முதலாக இத்திட்டத்தை நிறைவேற்ற கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு வாய்ப்பை உருவாக்கி 25.09.2019 அன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் இரு அரசுகளுக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் தேர்தல் வந்ததால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலத்தில் இப்பிரச்னையை பேசினால் தான் இது முடியும். அவர் இரு மாநிலங்களும் சகோதர மாநிலங்கள் என்ற மனப்பான்மை கொண்டவர். அதனால் இப்பொழுதே இதில் தீவிர கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "இது கேள்வி நேரம் ஜாடை மாடையாக கூட குற்றம் சொல்லக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் இதில் முனைப்பு காட்டினார் என்று சொல்வதில் தவறு இல்லை, ஆனால் அதிமுக ஆட்சியில் தான் இத்திட்டம் முன்னெடுக்கப் பட்டதாக கூறுவது தவறு. இத்திட்டத்திற்கு முதல் பேச்சு தொடங்கியவனே துரைமுருகன் தான். 1989-ஆம் ஆண்டில் நான் தான் முதல் முறையாக பேச போனேன். இதுவரை அமைச்சர்கள் அளவில் 10 முறையும், அதிகாரிகள் 18 முறை என 28 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.

இதுவரை ஆனைமலையாற்றில் நாங்கள் தான் அணை கட்டுவோம் என்று உறுதியாக இருந்த கேரளா அரசு, தற்போது நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஆனைமலையாற்றில் இரண்டரை டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய கேரளா முதல்வர் நியாயமாக நடந்து கொள்கிறார். அவரிடம் மறுபடியும் பேச சொல்வோம். தற்போது தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி முடிவு கட்டலாம் என ஒரு யோசனை வந்துள்ளது” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “சென்ற ஓராண்டில் மட்டும் பரம்பிக்குளம் அணையில் இருந்து 15 டிஎம்சி தண்ணீரும், சோலையாறில் இருந்து 5 டிஎம்சி தண்ணீரும், ஆழியாறு அணையில் இருந்து 10 டிஎம்சி தண்ணீரும் வீணாக அரபிக்கடலில் கலந்துள்ளது. மேல்நிராறில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து நல்லாறு அணை அமைத்தால் 7.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திற்கு டேம் டு ரூட் என்ற இஸ்ரேல் பாசன முறை மூலம் தண்னீர் கொண்டு செல்லப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், “மாண்புமிகு அமைச்சர் பொள்ளாச்சிக்காரர்” என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு “அவர் அமைச்சர் இல்லை இப்போ உறுப்பினர்” என்றார். அதற்கு துரைமுருகன் “இருக்க வேண்டிவர் சார் அவரு! He was a knowledgeable and senior man! அவருக்கு அவர்கள் ஆட்சியில் அமைச்சர் பதவி கொடுக்காததால் நான் வருத்தப்படுகிறேன்’’ என்று சொல்ல சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் பேசிய துரைமுருகன், “பரம்பிக்குளம் அணை தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாக கூடாது என்று ஜெயராமன் சொன்னதை வரவேற்கிறேன். மடை விட்டு மடை பாசனம் என்ற இந்த திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம். இந்தியாவில் யாரும் செய்ய முடியாத ஒரு திட்டம். மேற்கு நோக்கி செல்கின்ற நீரை திருப்பி 8 அணைகளுக்கு தண்ணீர் தரும் தனித்துவமிக்க திட்டம்.

காமராசர் காலத்தில் 58 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கலைஞர் அவர்கள் தான் இதற்கு திட்ட ஒப்புதல் கொடுத்திருந்தார். நம்முடைய பொறியாளர்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு திட்டம். உறுப்பினர் ஜெயராமன் குறிப்பிட்டது போல இஸ்ரேல் மாடலில் செய்ய வேண்டும். ஒரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பி அது எப்படி இருக்கின்றது என்று பார்த்து அதன் பின்பாக அதை செயல்படுத்தலாம் என ஒரு யோசனை எழுந்துள்ளதாக” அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.