ETV Bharat / state

'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது'

author img

By

Published : Aug 7, 2020, 1:45 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

High court
High court

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டடம், மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசான தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "சொத்துக்கள் மீது உரிமையுள்ள எங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டத்துக்கு முரணானது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வீட்டை, அரசு எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாகப் பாதிக்கும்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதிப்புமிக்க புராதன நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க, வருமான வரித்துறைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை. தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு உரிமை சட்டப்படி உரிமையில்லை. இது பொதுப் பயன்பாடும் அல்ல. எந்தச் சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை” என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர், 'இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாரிசுதாரர்கள் இருவரும் அறக்கட்டளை தொடங்கி சொத்துக்களை அளிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்கவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது' என்று வாதிட்டார்.

இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த நீதிபதி, வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு பரிந்துரைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்குவது மக்களின் எண்ணம் - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.