ETV Bharat / state

மூன்றாம் பாலினத்தவருக்கு 1 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 8:56 PM IST

Transgender Reservation: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Transgender Reservation
மூன்றாம் பாலினத்தவருக்கு 1சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC) மூன்றாம் பாலினத்தவர்களைச் சேர்த்துள்ளதாகவும், இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர், அந்த சலுகையை இழக்க வேண்டியுள்ளதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்த பின் இதுவரை அந்த ஒதுக்கீட்டில் 1 மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின என அனைத்து பிரிவிலும் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இதை அடுத்து, தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவுகளிலும் 1 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கக் கூறி, விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மவுலிவாக்கம் கட்டிட வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மு.க.ஸ்டாலின்; முடித்து வைத்த உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.