ETV Bharat / state

7.5% இட ஒதுக்கீடு: சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

author img

By

Published : Mar 3, 2022, 3:16 PM IST

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒரே மாதிரியான படிப்பைப் படிக்கும் மாணவர்களைக் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளித்து இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? அப்படியானால் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா ? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா ? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதனிடையே, இந்த வழக்குகளின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச்.3) தொடங்கியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும்போது, 31 விழுக்காடு பொதுப்பிரிவினருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

மேலும், நீட் தேர்வை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்தப் பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரே மாதிரியான படிப்பைப் படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? எனவும், அப்படியானால் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஒரே படிப்பைப் படித்தாலும், அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் நுழைகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் எனவும், கட்டமைப்பு சமநிலையற்ற நிலையைக் கருதி தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார்.

இந்த வழக்குகளில் வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு.. திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.