ETV Bharat / state

மீண்டும் சூடு பிடிக்கும் குட்கா வழக்கு.. முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்கு தொடர அனுமதி?

author img

By

Published : Apr 15, 2023, 6:53 PM IST

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது டிஜிபிக்களிடம் விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.

அதனையடுத்து பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி விமலா மற்றும் கலால்துறை , உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர். அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் ஒரு பிரிவிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளிலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக அறியப்பட்டதை வைத்து அமலாக்கத் துறையினர் குட்கா குடோன் உள்ளிட்ட வழக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினர் விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை வைத்து பல மாநிலங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் தொடர்பிருப்பவர்களாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டு, அதன் அப்படையில் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 9 பேரின் பட்டியலை அனுப்பி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.ஐ கடிதம் அனுப்பியிருந்தது.

குறிப்பாக அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்கில் சேர்க்க முடியும் என்ற நடைமுறை உள்ளதால் சி.பி.ஐ கடிதம் அனுப்பிய நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதேபோல இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட முன்னாள் தமிழக காவல்துறை டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் மற்றும் டிஜிபி அந்தஸ்து பெற்ற முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகிய இரு ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு சி.பி.ஐ-க்கு பதில் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டிகே ராஜேந்திரனிடம் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சிபி.ஐ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தமிழக முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரிடம் சிபி.ஐ வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மீண்டும் குட்கா வழக்கு சூடுபிடித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.