ETV Bharat / state

மேட்டூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அறிவிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சதாசிவம்

author img

By

Published : Aug 29, 2021, 4:08 AM IST

சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஆக.28) வேளாண், கால்நடை மற்றும் மீன்வளம், பால்வளத்துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினரான பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் பேரவையில் பேசும் போது, “தமிழ்நாட்டில் சில நேரங்களில் வெங்காயத்தின் விலை ரூ.30 லிருந்து ரூ.200க்கு உயர்ந்து விடுகிறது.

அரசுக்கு யோசனை

வெங்காயத்தின் பற்றாக்குறையை போக்கும் வகையில், தமிழ்நாட்டி உள்ள விவசாயிகளை ஊக்குவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கினால் பற்றாக்குறையை போக்கலாம்.

மேட்டூர் தொகுதியின் பிரதான தொழிலான கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும்.

கொளத்தூர் ஒன்றியத்தில் சத்ததனப்பட்டியில் பால் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒரு கோடி மீன்குஞ்சுகள்

மேட்டூர் பகுதியின் முக்கிய தொழிலாக இருந்து வரும் மீன்பிடித்தொழிலை நம்பி 3 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கு படகு பரிசல் மற்றும் வலைகளை இலவசமாக அரசு வழங்க வேண்டும்.

மேட்டூர் அணையில் ஒரு போகத்திற்கு 45 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. இதனை உயர்த்தி ஒரு கோடி மீன்குஞ்சுகள் விட வேண்டும். அந்த அணையை உலகத்தரம் வாய்ந்த அணையாக மாற்றித்தர வேண்டும்.

மேட்டூர் அணை 93.04 டிஎம்சி நீரைத் தாங்கி நிற்கக்கூடியது. ஆனால் அது மேட்டூர் விவசாயிகளுக்கு பயன்படுவதில்லை. எனவே நீரேற்று முறையை பயன்படுத்தி மேட்டூர் தொகுதி விவசாயிகளுக்கு நீர் வழங்க வேண்டும். அணையைத் தூர்வாரினால் கூடுதலாக 10 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்” என்றார்.

மேட்டூர் மாவட்டம்

தொடர்ந்து, “சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டூரை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும், நிர்வாக வசதிக்காக மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், அந்தியூர் ஆகிய ஐந்து தொகுதிகளை உள்ளடக்கி மாட்டமாக பிரிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை அதிகரிக்க நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.