ETV Bharat / state

'இலவு காத்த கிளி யார்?'-ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்

author img

By

Published : Feb 4, 2022, 8:37 PM IST

ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய ஒரு சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

many bills wait for tn governor approval  tamil nadu governor  r n ravi  tamil nadu governor r n ravi  தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்  தமிழக ஆளுநர்  ஆர் என் ரவி  தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி
தமிழக ஆளுநர்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டபேரவைக்கு திருப்பி அனுப்பியதை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய ஒரு சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவற்றில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதாக்களில், கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பதற்கான கூட்டுறவுச் சங்கச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட மசோதாவும் உள்ளடங்கும்.

ஏனெனில், 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான இயக்குநர்கள் அதிமுக பிரதிநிதிகளாக இருப்பதால், தற்போதைய திமுக அரசு அந்த திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

தற்போதைய திமுக அரசு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஏனெனில் தற்போதுள்ள சங்க இயக்குநர்கள் போலி நகைகள் மீது கொடுக்கப்பட்ட கடன் உள்ளிட்ட நிதிகளில் பெரிய அளவில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆறு கூட்டுறவு வங்கிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின்பேரில், சம்பத்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவுத்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி அனுப்பிய இந்த மசோதா இன்னும் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து மாதவரம் பால் பண்ணையில் 20 ஏக்கரை அரசு கண்டறிந்து சித்தா மருத்துவப்பல்கலைக்கழகம் அமைப்பதற்கான வரைவு மசோதா ஒன்றும் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் மசோதாவின் பரிசீலனையின் அடிப்படையில், அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையின் இணைப்புக் கட்டடத்தில் பல்கலைக்கழகம் அமைக்க சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், ஆளுநர் இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் அமைதியாக இருந்து வருகிறார்.

அடுத்து கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்து அனுப்பிய சட்ட முன்வடிவிற்கும் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் வரும் 7ஆம் தேதி டெல்லி பயணம் - ஆளுநரின் திடீர் டெல்லி விஜயத்துக்கான காரணங்கள் என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.