ETV Bharat / state

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் - திருமண பந்தத்தில் இணைந்தது:அமைச்சர்கள் பங்கேற்பு

author img

By

Published : Oct 28, 2022, 3:07 PM IST

மனநல காப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணையை வழங்கி மகிழ்ச்சியில் வாழ்த்தினார்.

மனநல காப்பகத்தில் மலர்ந்த மகேந்திரன், தீபா காதல் திருமணத்தில் முடிந்தது:மா.சுப்பிரமணியன் வாழ்த்து
மனநல காப்பகத்தில் மலர்ந்த மகேந்திரன், தீபா காதல் திருமணத்தில் முடிந்தது:மா.சுப்பிரமணியன் வாழ்த்து

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைப்பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தினந்தோறும் ஆறேழு திருமணங்களுக்குச்செல்வேன். ஆனால், இதுவரை மிகவும் மகிழ்வுடன் கலந்துகொண்ட திருமணம் ஜிப்ஸி இன நரிக்குறவ மக்களின் திருமண நிகழ்வாகும். அதற்கடுத்து இந்த கல்யாணம் தான்.

இந்த திருமணத்தில் நான் கலந்து கொண்டது என் வாழ்நாளின் அரும் பேறுகளில் ஒன்று. திருமண விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றி திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், அழையா விருந்தாளியாக இந்த திருமணத்திற்கு நான் வந்து இருக்கிறேன்.

நிதி நிலை அறிக்கையில் இருந்து 40 கோடி இந்த மருத்துவமனையின் கட்டமைப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு, காய்கறிகள் இங்குள்ள தோழர்களுக்கு வழங்கப்படுகிறது. பேக்கரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதேபோல தற்பொழுது இங்கு காலியாக இருக்கக்கூடிய இடங்களில், நெல் பயிரிட்டு உள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருமணம் நடைபெற்ற மகேந்திரன் மற்றும் தீபா இரண்டு பேரும் பட்டதாரிகள். அதனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையிலேயே அவர்கள் இரண்டு பேருக்கும் வார்டு மேற்பார்வையாளராக பணி வழங்கப்படுகிறது' எனக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அந்த பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மணமக்கள் இருவரிடமும் வழங்கினார்.

பின் மணமேடையில் பேசிய மணமகன் மகேந்திரன் மற்றும் மணமகள் தீபா, 'எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருந்தால்கூட இப்படி நடத்தி வைத்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் எங்கள் திருமணம் நடைபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேலை வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி' எனத்தெரிவித்தனர்.

மேலும், மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வருகைதந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் பூர்ணசந்திரா கூறும்போது, 'மகேந்திரன், தீபா திருமணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் குணமடைந்து காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்த மருத்துவமனையிலேயே பணி புரிவதற்கான பணிநியமன ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி மேலும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்' எனத்தெரிவித்தார்.

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் - திருமண பந்தத்தில் இணைந்தது:அமைச்சர்கள் பங்கேற்பு

இதையும் படிங்க: எங்கேயும் காதல்: மனநல காப்பகத்தில் பூத்த காதல்; நோயாளியாய் வந்தவர்கள் நாளை இணையர்களாக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.