ETV Bharat / state

மாநில கல்லூரி மாணவர் தாக்குதல் வழக்கு.. பிடிபட்ட 7 மாணவர்களுக்கு ஜாமீன்.. நல்லொழுக்க பயிற்சி பெற நீதிபதி உத்தரவு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:09 AM IST

மாநிலக் கல்லூரி மாணவரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பிற கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, பறவை திட்டத்தின் கீழ் கவுன்சிலிங் பெற உத்தரவிட்டார்.

கல்லூரி மாணவரை தாக்கிய 7 மாணவர்களுக்கு ஜாமின்
கல்லூரி மாணவரை தாக்கிய 7 மாணவர்களுக்கு ஜாமின்

சென்னை: நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 19). இவர் மாநிலக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 22) காலை பிரேம்குமார் கல்லூரி செல்வதற்காக வடபழனி பேருந்து பணிமனையில் இருந்து 25 தடம் கொண்ட பேருந்துக்காக காத்திருந்து உள்ளார். அப்போது பணிமனையில் இருந்த 20-க்கும் மேற்பட்ட நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரிடம் எந்த கல்லூரி என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மாநில கல்லூரி என கூறியதால் பிரேம்குமாரை அவர்கள் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மாணவர்கள் தப்பித்து சென்ற நிலையில் ஒருவர் மட்டும் சிக்கி உள்ளார்.

அதைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவர் பிரேம்குமாருக்கு போலீசார் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட மாணவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நந்தனம் கல்லூரியில் படிக்கும் மாணவர் தீபகணேஷ் (19) என்பது தெரியவந்தது.

மேலும், இவர் அளித்த தகவலின் பெயரில் தப்பி ஓடிய நந்தனம் கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக், சதீஷ், கிரிதரன், அரசு, நவீன், தமிழ் செல்வன் ஆகிய ஆறு மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களிடமும் விசாரணை நடத்திய போது, மாநிலக் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி நந்தனம் கல்லூரி மாணவர்களை தாக்கி வருவதால், நந்தனம் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் அபிஷேக் வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து மாநிலக் கல்லூரி மாணவர்களை தாக்க திட்டமிட்டதும், அதன்படி வடபழனி பணிமனையில் நின்ற மாநிலக் கல்லூரி மாணவர் பிரேம்குமார், தனியாக சிக்கிய உடன் அபிஷேக் வாட்ஸ் அப் குழுவில் தனது நண்பர்கள் பலரை வரவழைத்து பிளாஸ்டிக் பைப்பால் அவரை தாக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்கள் மீது சட்டவிரோதமாக ஒர் இடத்தில் கூடுதல், சட்டவிரோதமாக தடுத்தல், சிறுகாயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களையும் சைதாப்பேட்டை நீதிமன்ற 23வது மேஜிஸ்திரேட் வேல்ராஜ் முன்பு ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த மேஜிஸ்திரேட் வேல்ராஜ், மாணவர்களை ஜாமீனில் விடுவித்தார். மேலும், இளம் மற்றும் முதல் முறை குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பறவை திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டை மாடர்ன் பள்ளியில் 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன்படி கல்லூரி மாணவர்கள் 7 பேரும் கல்லூரி முடிந்து தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நல்லொழுக்க பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என வடபழனி போலீசார் தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து, பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் தேவை: வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.