ETV Bharat / state

ஜெயிலர் படத்தின் வழக்கு: "இது பொதுநல வழக்கு அல்ல... விளம்பர நல வழக்கு" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 2:42 PM IST

Jailer Movie U/A Certificate Issue: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள 'யுஏ' சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Jailer Movie
ஜெயிலர்

சென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் நிறைந்து இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திரைப்படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான 'யுஏ' சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது என்றும் அந்த மனுவில் கூறிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த திரைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, லட்சக்கணக்கான பேர் திரைப்படத்தை கண்டுள்ளதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஏ (A) சான்றிதழ் வழங்கப்பட வேண்டிய இந்த திரைப்படத்திற்கு யுஏ (UA) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, திரைப்படங்களில் எந்த திரைப்படத்தில் வன்முறை அதிகம் உள்ளது, எந்த திரைப்படத்தில் குறைவாக இருக்கிறது என்று எப்படி வகைப்படுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் இது பொதுநல வழக்கு அல்ல, விளம்பர நல வழக்கு என்று கூறி, மனு மீது உத்தரவு பிறப்பிக்கத் துவங்கிய நிலையில், மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 69th National Film Awards: தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெற்ற முதல் நடிகரானார் அல்லு அர்ஜுன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.